சென்னை: சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் காவல் துறையினர் கடந்த இரண்டு நாள்களாக சென்னை பெருநகரில் போதைப்பொருள்களுக்கு எதிராகத் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதில், குட்கா, வலி நிவாரண மாத்திரைகளை கடத்துபவர்கள், பதுக்கிவைப்பவர்கள், விற்பனை செய்பவர்கள் எனக் கண்டறிந்து 47 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 65 நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இதில், கஞ்சா வைத்திருந்த, விற்பனை செய்த 14 நபர்கள் கைதுசெய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 16.5 கிலோ கஞ்சா, ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல்செய்யப்பட்டது.
அதேபோல், வலி நிவாரணி மாத்திரைகள், போதை ஸ்டாம்புகள் விற்பனை செய்த 12 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 120 வலி நிவாரண மாத்திரைகள், 169 போதை ஸ்டாம்புகள், இருசக்கர வாகனம், ஒரு கார், நான்கு செல்போன், 17 ஆயிரம் ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டன.
காவல் ஆணையர் எச்சரிக்கை
மேலும், குட்கா, புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 39 நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 85 கிலோ குட்கா, 151 கிலோ மாவா, 18 ஆயிரம் ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டது.
மேலும், சென்னை பெருநகர காவல் துறையினர் போதைப்பொருள்களுக்கு எதிராகத் தீவிர கண்காணிப்பு, சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர். இதனால், வலி நிவாரண மாத்திரைகள் உள்பட சட்டவிரோத பொருள்கள் வைத்திருப்பவர்கள், விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் ஆணையர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
இதையும் படிங்க: நெதர்லாந்து, கனடாவிலிருந்து சென்னைக்கு கடத்திவந்த போதை மாத்திரைகள், கஞ்சா பறிமுதல்