சென்னை: ஆயிரம் விளக்கு ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் மோகன்( 22). இவரது நண்பர் ஷாமின் மனைவிக்கு பிறந்த நாள் என்பதால் நேற்றிரவு புதுப்பேட்டை லப்பை தெருவிற்கு கேக் வெட்டும் நிகழ்ச்சிக்கு மோகன் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றார்.
பின்னர் பிறந்தநாள் நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு வந்த போது, இரண்டு நபர்கள் கையில் ராடு வைத்துக்கொண்டு ஷாமை விசாரித்து சென்றதாக அங்கிருந்த நபர்கள் மோகனிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து மோகன் அவரது நண்பர்களான சந்தோஷ், ஷாம், சுனில்குமார், மனோஜ் ஆகியோரை அழைத்துக்கொண்டு, ஏரியாவில் ஷாமை விசாரித்து சென்ற நபர்களை தேடி புதுப்பேட்டையில் உள்ள பம்பிங் ஸ்டேஷனிற்கு சென்றனர். அங்கு ஷாமை தேடி வந்த 8 பேர் கொண்ட கும்பல் இருந்ததால், இரண்டு கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
எதிர் கோஷ்டி திடீரென கத்தியை எடுத்ததால் மோகன் உள்பட அனைவரும் சிதறி ஓடியுள்ளனர். புதுப்பேட்டை அய்யாசாமி தெரு வழியாக மோகன் தப்பித்து ஓடி அங்கிருந்த வீட்டிற்குள் புகுந்து ஒளிந்ததாக தெரிகிறது. அப்போது வீட்டிலிருந்த பெண் கூச்சலிட்டு திடீரென வெளியே ஓடி வந்ததால், இதனை அறிந்து சுற்றி வளைத்த கும்பல் மோகனை வீட்டிலேயே சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.
இது தொடர்பாக இறந்த மோகனின் தாய் வளர்மதி எழும்பூர் காவல் நிலையத்திற்கு அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோகனின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஏற்கனவே மோகன் மீது ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் மிரட்டல் உள்ளிட்ட 3 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் முன் விரோதம் காரணமாக புதுப்பேட்டையை சேர்ந்த விக்ரம், வெங்கடேசன், மோசஸ், அபு, நரேஷ், வசீகரன் ஆகியோர் மோகனை கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தனிப்படை போலீசார் கொலை செய்துவிட்டு தப்பியோடிய நபர்களை சிசிடிவி காட்சிகளை வைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த விக்ரம், வெங்கடேசன், மோசஸ், அபு, நரேஷ், வசீகரன் ஆகிய 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 2 கத்திகள் மற்றும் 1 இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரிடமும் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னை விமானநிலையத்தில் ரூ.1.17 கோடி மதிப்புடைய வெளிநாட்டுப்பணம் பறிமுதல்!