வேலூர்: புலிக்குட்டி விற்பனைக்கு உள்ளது என ஸ்டேட்டஸ் வைத்த பார்த்திபன் என்பவரை வனத்துறை கைது செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் வேலூர் பகுதிகளில் புலிக்குட்டி ஒன்று விற்பனைக்கு உள்ளது என்ற புகைப்படத்துடன் கூடிய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸின் நகல் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இந்நிலையில் இந்த ஸ்டேட்டஸ் வேலூர் வனத்துறையினரின் பார்வைக்குச்சென்றது. இதனையடுத்து அந்த ஸ்டேட்டஸை வைத்தவர் காட்பாடியைச் சேர்ந்த பார்த்திபன் என்பது தெரியவந்தது.
பார்த்திபன் அந்த ஸ்டேட்டஸில், 'பிறந்து மூன்று மாதங்களான புலிக்குட்டி விற்பனைக்கு உள்ளது. புக் செய்தால் 10 நாட்களில் டெலிவரி செய்யப்படும். புலிக்குட்டியின் விலை ரூ.25 லட்சம்', எனக் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து வேலூர் வனத்துறையினர் இவரை கைது செய்துள்ளனர்.
மேலும் வனத்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், பார்த்திபன் தற்போது சார்ப்பனாமேடு பகுதியில் வாடகை வீட்டில் தங்கி, திருப்பதியில் சட்டம் படித்து வருகிறார் என்பதும் தெரியவந்தது. இவரது நண்பரான சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த தமிழ் என்பவர், செல்லப்பிராணிகளின் கடை வைத்துள்ளார் என்றும்; அவர் கேட்டதற்கு இணங்க தான் புலிக்குட்டி விற்பனை குறித்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்ததாக பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
பின்னர் பார்த்திபன் கொடுத்த தகவலின் அடிப்படையில் தமிழ் என்பவரைப் பிடித்து வனவிலங்கு பாதுகாப்பு குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் புலிக்குட்டிகள் உண்மையானவை தானா அல்லது ஏமாற்று வேலையா எனும் கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பல்லி விழுந்த சத்துணவை சாப்பிட்ட 25 மாணவர்கள் மயக்கம்