அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், "வேலூரில் உள்ள எட்டு திமுக சட்டமன்ற உறுப்பினர்களும், மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தோம். காரணம், வேலூரில் மிகக் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. தேர்தலுக்குப் பிறகு மக்களுக்கு நன்றி சொல்ல செல்லும்போது எல்லா ஊர்களிலும் மக்கள் குடங்களுடன் நின்று குறைகளை சொல்கிறார்கள். அந்த ஊரில் பரவாயில்லை இந்த ஊரில் பரவாயில்லை என்பது அல்ல, இவ்வளவு பெரிய குடிநீர் பஞ்சத்தை எனது 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை. அதற்கு முதல் காரணம் பாலாற்றில் இருக்கின்ற மணலை சுரண்டி எடுத்துவிட்டார்கள், தொடர்ந்து திருட்டுத்தனமாக மணல் அள்ளுகின்றனர்.
மாவட்ட ஆட்சியரைக் கேட்டால் நாங்கள் யாருக்கும் மணல் எடுக்க அனுமதி அளிக்கவில்லை என்கிறார். ஆனால் இப்பொழுது காவல்துறைதான் மணல் எடுப்பதற்கு மறைமுகமான அனுமதியை கொடுத்திருக்கிறார்கள். இவ்வளவு பெரிய பிரச்னை இருக்கிறது, மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்டத்தின் அமைச்சரை, சட்டமன்ற உறுப்பினர்களை வைத்து குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்திருக்க வேண்டும் என்பது எங்களின் பெரிய வருத்தம். போர்க்கால நடவடிக்கை என்பார்கள், அதைவிட அதிக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே நிலை நீடித்தால் மக்கள் ஒரு கிளர்ச்சியை, உள்நாட்டு யுத்தத்தை ஆரம்பித்துவிடுவார்கள். தாகத்தை பொறுத்துக்கொள்ள முடியாது, நீர் இல்லாமல் மக்கள் தத்தளிக்கிறார்கள். ஆனால் மேலே இருக்கின்ற ஆட்சியாளர்களுக்கோ அதைப்பற்றி கவலையில்லை.
நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பார்ப்போம், செய்யாவிட்டால் நாங்கள் மக்களை சந்தித்து போராட்டம் நடத்துவோம். சென்னையில் குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. கிருஷ்ணாவில் இருந்து தண்ணீர் கொண்டு வர வேண்டும், யாராவது ஒரு அமைச்சர் ஆந்திரா சென்று கேட்டிருப்பார்களா? பிறகு எப்படி தண்ணீர் கொடுப்பார்கள். அதிமுக ஆட்சியில் இதுவரையில் குடிதண்ணீருக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சென்னைக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கவில்லை" என்றார்.