வேலூர் மாநகர் பகுதிகளில் ஷவர்மா கடைகளில் உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து, 100 கிலோ வரை உணவு தயாரிப்புப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர். அது தொடர்பாக சம்பந்தபட்ட 9 கடைகளுக்கு நோட்டீஸ் அளித்தும் 2 கடைகளுக்கு ரூ.2,000 அபராதமும் வசூல் செய்துள்ளனர்.
மாநகராட்சியில் ஷவர்மா கடைகளில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் இன்று (மே 11) மட்டும் சுமார் 6 கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் சுகாதாரமற்ற முறையில் இருந்த இறைச்சி மற்றும் ஷவர்மா தயாரிப்புப் பொருட்கள் 10 கிலோ அளவிலான பொருட்கள் அழிக்கப்பட்டன. மேலும், காலாவதியான 10 கிலோ ஐஸ்கிரீம்களும் அழிக்கப்பட்டன.
இதுவரை மாவட்டத்தில் சுமார் 60-க்கும் மேற்பட்ட ஷவர்மா கடைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் முறையான பராமரிப்பு மற்றும் சுகாதாரமற்ற முறையில் உள்ள 9 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், கெட்டுப்போன மற்றும் காலாவதியான 6 கிலோ ஷவர்மா சிக்கன் உட்பட 100 கிலோ உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன. மேலும் 2 கடைகளுக்கு தலா ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஷவர்மா விற்பனைக் கூடங்களுக்கு ரூ.20,000 அபராதம்; உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி