திருச்சி: மணப்பாறை பகுதிகளில் கடந்த சில நாள்களாக வீடுகள், கடைவீதி பகுதிகளில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனங்கள் திருடு போயின.
இந்நிலையில் இரண்டு நாள்களுக்கு முன்பாக மணப்பாறை காவல் துறை சார்பில் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் ' திருடர்கள் அதிகமாக உலா வருவதாகவும், பொதுமக்கள் தங்களது இரண்டு சக்கர வாகனங்களை பாதுகாத்திடவும்' எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பலே திருடன் கைது
மணப்பாறை காவல் துணைக் கண்காணிப்பாளரின் உத்தரவின்பேரில், காவல் உதவி ஆய்வாளர்கள், குற்றப்பிரிவு காவல் துறையும் வாகன சோதனைகள் நடத்தினர். இந்நிலையில் திருச்சி-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில், நொச்சிமேடு பகுதியில் நேற்று(ஆக.12) காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக இருக்கர வாகனத்தில் வந்த இளைஞரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது, அந்த இளைஞன் முன்னுக்குப்பின் முரணாக பேசியதையடுத்து, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இளைஞர் திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம், ஊத்துக்குழி வடக்கு தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன்(23) என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய தொடர்விசாரணையில்,பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடி அதை கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
தனக்கு கியர் வண்டி ஓட்டத் தெரியாது என்பதால், கியர் இல்லாத டிவிஎஸ் XL வாகனங்களை மட்டும் குறிவைத்து திருடி வந்தாக அந்த இளைஞர் தெரிவித்தார்.
இதனையடுத்து, அந்த இளைஞரிடமிருந்து 17 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த மணப்பாறை காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 'ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது இதுவரை 35 வழக்குகள் பதிவு'