நாட்டின் தலைநகரங்களில் விற்பனை செய்யப்படும் மானியமில்லாத 14 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு உருளையின் விலை கடந்த 12ஆம் தேதி முதல் ரூ.147 உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப, மாதந்தோறும் சமையல் எரிவாயு உருளை விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. அந்த வகையில் 14.2 கிலோ மானியமில்லாத எரிவாயு உருளையின் விலை டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி சென்னையில் எரிவாயு உருளை ரூ. 734-லிருந்து ரூ. 147 உயர்த்தப்பட்டு தற்போதைய விலை ரூ. 881-க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயர்வைக் கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
அதன் ஓர் அங்கமாக திருச்சியில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் எண் 1 சுங்கச்சாவடி பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் கலை தலைமை வகித்தார். இதில், கலந்துகொண்டவர்கள் எரிவாயு உருளை விலை உயர்வைக் கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டம்: மாநிலம் முழுவதும் வழுக்கும் எதிர்ப்புகள்!