திருச்சி: மணப்பாறையில் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஒன்றிய பாஜக அரசு உயர்த்தியுள்ள பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயர்வைக் கண்டித்து நூதன முறையில் இருசக்கர வாகனத்திற்கு பாடை கட்டி, கொள்ளி சட்டி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணப்பாறை கோவில்பட்டி சாலையில் இருந்து புறப்பட்ட பேரணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் த. இந்திரஜித், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் ப. மதனகோபால் ஆகியோர் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி சாலையில் இருந்து தந்தை பெரியார் சிலை வரை பேரணியாக வந்து பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்துதல், ஊரடங்கினால் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மக்களுக்கு 7500 ரூபாய் நிவாரணம் வழங்குக,
தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகையை உடனே வழங்குக,
செங்கல்பட்டில் தடுப்பு ஊசி தயார் செய்ய தமிழ்நாடு அரசுக்கு அனுமதி வழங்கி, கரோனா தடுப்பூசி தடையின்றி மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கு உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் ஜனசக்தி உசேன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.