திருச்சி: மணப்பாறை அடுத்த பன்னாங்கொம்பு அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.34.68 லட்சம் மதிப்பில் புதிய அறிவியல் ஆய்வக கட்டடத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து பன்னாங்கொம்பு, ஆமணக்கம்பட்டி, சுக்காம்பட்டி உள்ளிட்ட அரசு பள்ளி மாணவர்கள் 530 பேருக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், ஆசிரியர்கள் சில நேரங்களில் கண்டிப்புடன் நடந்து கொள்வார்கள் அது உங்கள் மீது கொண்ட தனிப்பட்ட விருப்பு வெறுப்பு காரணமல்ல, உங்கள் மீதுள்ள அக்கறைதான் காரணம். ஆசிரியர்கள் என்னென்ன அறிவுரைகள் சொல்கிறார்களோ அதையெல்லாம் நீங்கள் உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.
வருங்காலத்தில் உயர்கல்வி முடித்துவிட்டு வேலைக்குச் செல்லும் போது நல்லது கெட்டது எடுத்து சொல்வதற்குக் கூட இந்த சமுதாயத்தில் யாரும் இருக்கமாட்டார்கள்.
அதை நீங்கள் எதிர்கொள்ள ஆசிரியர்கள் கூறும் அறிவுரைகள்தான் உங்களுக்கு பயன்படும். மதிப்பெண் மட்டுமே உங்களை மதிப்பீடு செய்ய முடியாது. உங்களின் தனித்திறமையை கண்டறிந்து அந்த திறமை மூலம் உங்களை வலுப்படுத்துகின்ற விதத்தில் செயல்பட வேண்டும் என கூறினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது, வட்டாட்சியர் கீதாராணி மற்றும் ஒன்றிய பெருந்தலைவர் அமிர்தவள்ளி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு வாழ்நாள் ஆயுள் - கேரள உயர் நீதிமன்றம்