திருச்சி: மணிகண்டம் மட்டபாரப்பட்டி ஆற்றுப்பாலம் அருகே அதிவேகமாகவும் தாறுமாறாகவும் கார் வந்துள்ளது. அந்த கார் அங்கு இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நாகமங்கலத்தை சேர்ந்த காதர் உசேன் என்பவர் மீது மோதியுள்ளது. அதில் காதர் உசேன் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
தொடர்ந்து நிற்காமல் சென்ற கார் மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த எல்.ஐ.சி முகவர் பழனிவேல் என்பவர் மீது மோதியது. இதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த காதர் உசேனை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதிவேகமாக காரை ஓட்டி வந்த ஓட்டுநர் பாலச்சந்திரன் காரை அங்கேயே விட்டு தப்பி ஓடியுள்ளார். அவரை ஊர்மக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பாலச்சந்திரனும் மற்றொரு கார் ஓட்டுநரும் போட்டிப்போட்டு வந்துள்ளனர்.
கட்டுப்பாட்டை இழந்த பாலச்சந்திரன் இரண்டு இருசக்கர வாகனங்களின் மீது மோதியுள்ளார் என்பது தெரியவந்தது. இது குறித்து மணிகண்டம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கார்-பஸ் மோதி கோர விபத்து : 6 பேர் உயிரிழப்பு