திருச்சி: மணப்பாறையை அருகே திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி நோக்கி செல்லும் சித்தாநத்தம் பிரிவு சாலை அருகே சென்டர்மீடியனில் கார் மோதி தீப்பற்றி எரிந்துள்ளது.
இதை அந்த வழியாக சென்றவர்கள், மணப்பாறை காவல் துறை, தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
காருக்குள் எரிந்த நிலையில் உடல்
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற மணப்பாறை தீயணைப்புத் துறையினர், அரை மணி நேரத்திற்கும் மேலாக எரிந்துகொண்டிருந்த காரை, நீர் பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீயை முழுவதுமாக அணைத்த பின்னர், காருக்கு அருகே சென்ற தீயணைப்புத் துறையினர், ஓட்டுநர் இருக்கையில் ஒருவர் எரிந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர், மணப்பாறை காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ஆர். பிருந்தா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முற்றிலும் எரிந்த நிலையில் இருந்த ஓட்டுநரின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
கார் எப்படி தீ பற்றியது?
இதனையடுத்து, காவல் துறை மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் காரில் இருந்த நபர் திருச்சி, தென்னூர் மூல கொல்லை தெருவைச் சேர்ந்த நாராயணன் (32) என்பதும், திருச்சியிலிருந்து மணப்பாறைக்கு சவாரி வந்துவிட்டு மீண்டும் திருச்சியை நோக்கிச் சென்றதும் தெரியவந்தது.
அப்போது, எதிர்பாராத விதமாக காரில் தீப்பற்றியது. இதனால் காரில் சிக்கிக்கொண்ட ஓட்டுநர், உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்து உயிரிழந்தார் என்பதும் தெரியவந்தது.
மேலும், கார் எப்படி தீப்பற்றியது? காரணம் என்ன? என்பது குறித்து மணப்பாறை காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் ஓடிய கார் தீப்பற்றி எரிந்த சம்பவம் மணப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'வெறி நாய் கடித்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு'