திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வடக்கு உத்தர வீதியிலுள்ள மன்னார்குடி ஜீயர் மடத்தைச் சேர்ந்த செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் இன்று (பிப். 9) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பசு உள்ளிட்ட கால்நடைகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லும்போது உரிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில் ஒரு இடத்திலிருந்து கால்நடைகளை மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லும் போது அவற்றுக்கு வேண்டிய உணவு, தண்ணீர், கால்நடை மருத்துவரின் சான்றிதழ், கால்நடைகளுக்கு இடையே 6 அடி இடைவெளி இருக்க வேண்டும் உள்ளிட்ட பல விதிமுறைகளை பின்பற்றுமாறு தெரிவித்துள்ளது.
கால்நடைகளை துன்புறுத்தக்கூடாது. அதோடு 50 கிலோ மீட்டர் பயணம் செய்தவுடன் கால்நடைகளைக் கீழே இறக்க வேண்டும். சிறிது ஓய்வுக்குப் பின்னர் மீண்டும் கால்நடைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்ல வேண்டும்.
மாவட்ட ஆட்சியர், கால்நடை மருத்துவர், காவல்துறையினர், வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியவர்கள் கொண்ட குழு இந்த விதிமுறைகளை அமல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். சட்ட விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதை கண்காணிக்க நாங்கள் குழு அமைத்து உள்ளோம். அதற்கு 'பசு பாதுகாப்பு படை' என்ற பெயரில் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் பசு மாடுகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதை கண்காணிப்பாளர்கள். அப்போது சட்ட விதி மீறல்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தகவல் கொடுத்து, நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவார்கள்.
இந்த அமைப்பின் மாநில தலைவராக சந்தோஷ் குமார், மாநில செயலாளராக தமிழ்செல்வன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நாங்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளவில்லை. சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு அலுவர்களை நிர்ப்பந்தம் செய்வோம்.
வட இந்தியாவில் உள்ள கோ ரக்ஷன் அமைப்பினர் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறுவது தவறான தகவலாகும். சட்டப்படி பசு மற்றும் மாட்டு இறைச்சியை கொண்டு சென்றவர்களை தாக்கவில்லை. சட்டத்துக்குப் புறம்பாக செயல்பட்டவர்களைதான் பிடித்து கொடுத்திருக்கிறார்கள். வேண்டுமென்றே தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டுகளை பரப்புகின்றனர்.
கோ சாலைகளில் வளர்க்கப்படும் பசுமாடுகளுக்கு என வகுக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற நிபந்தனை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சாலைகளில் திரியும் பசுமாடுகளை பிடித்து வந்து அரசு அலுவலர்கள் வசம் ஒப்படைக்கவும் பசு பாதுகாப்பு படை நடவடிக்கை எடுக்கும் என்றார்.
பேட்டியின்போது பசு பாதுகாப்பு படை மாநிலத் தலைவர் சந்தோஷ் குமார், மாநில செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: ’திமுகவை விட டிடிவி.தினகரனால்தான் அதிக தொல்லை’