திருச்சி: மணப்பாறை அடுத்து சீகம்பட்டி ஊராட்சியில் முக்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் மானிய இடம் சோலைப்பட்டி, பொன்சங்கிப்பட்டி, இராயன்பட்டி, சீகம்பட்டி, வடக்கிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர்.
இந்நிலையில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகக் கோயில் இடத்தில் வசித்துவருபவர்களுக்குக் குடிமனை பட்டா வழங்கலாம் என விதி எண் 318இன்கீழ் 2019 ஆகஸ்ட் 30 அன்று அன்றைய அதிமுக அரசு பிறப்பித்த அரசாணையின் அடிப்படையில் கோயில் மானிய இடத்தில் வசித்துவந்த இருபத்து ஆறு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு குடிமனைப் பட்டா வழங்கிடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
![காலி செய்ய மறுத்து பொதுமக்கள் தர்ணா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tri-01-courtordersevacuationofland-belongingtothetreasury-publicdarnarefusestovacate-images-script-visual-tn10020_29112021223024_2911f_1638205224_628.jpg)
இந்நிலையில் நவம்பர் 30ஆம் தேதிக்குள் வீடுகளைக் காலி செய்யக்கோரி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதனடிப்படையில் மணப்பாறை இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் நீதிமன்ற உத்தரவுப்படி குடியிருப்புகளைக் காலி செய்யுமாறு கூறியுள்ளார். ஆனால் அவர்கள் அதற்குச் சம்மதிக்க மறுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உதவியோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
சென்ட் பட்டா நிலம்கூட இல்லை
இதையடுத்து வட்டாட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்திய பொதுமக்கள், ”மூன்று தலைமுறையாகக் குடியிருக்கும் இந்த இடத்திற்குக் குத்தகை வரி இன்றுவரை பாக்கித் தொகை இல்லாமல் கட்டிவருகிறோம். இந்த இடத்தைத் தவிர வேறு எங்கும் ஒரு சென்ட் பட்டா நிலம்கூட கிடையாது.
எனவே, சம்பந்தப்பட்ட அறநிலையத் துறையிடம் பரிந்துரை செய்து தாங்கள் வாழ்வதற்குத் தேவையான நடவடிக்கையை அரசு எடுக்கும்படி முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு மனு அனுப்பியுள்ளதால் கால அவகாசம் வழங்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டனர்.
![காலி செய்ய மறுத்து பொதுமக்கள் தர்ணா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tri-01-courtordersevacuationofland-belongingtothetreasury-publicdarnarefusestovacate-images-script-visual-tn10020_29112021223024_2911f_1638205224_507.jpg)
இதையடுத்து மனு அளித்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் கூறியதையடுத்து பொதுமக்கள் தர்ணாவைக் கைவிட்டுக் கலைந்துசென்றனர். வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த திடீர் தர்ணாவால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: ட்விட்டரின் புதிய சிஇஓ ஆகிறார் இந்தியர் பராக் அகர்வால்