திருச்சி: இ.கம்யூனிஸ்ட், மாநிலத் துணைச் செயலாளர், திருச்சியைச் சேர்ந்த இந்திரஜித் இல்ல திருமண விழாவில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அதன்பின், டி.ராஜா செய்தியாளர்களிடம் கூறியபோது, "இ.கம்யூ கட்சியின் அகில இந்திய மாநாடு, வரும் அக்டோபர் மாதம் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடக்கிறது. இம்மாநாடு, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநாடாக இருக்கும். தற்போதைய நிலையில், இந்திய அரசியல் பெரும் சவால்களை எதிர்கொண்டிருக்கிறது. பாஜக - ஆர்எஸ்எஸ் கூட்டு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை திருத்த முயல்கிறது. ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுகிறது. சாதிய, மத மோதல்களை தூண்டி வருகிறது.
இஸ்லாமிய இறைத்தூதர் குறித்து பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் நீக்கப்பட்டுள்ளார். ஆனால், பாஜக, ஆர்எஸ்எஸ் போன்றவை இதுபோன்ற கருத்துகளை தொடர்ந்து கூறி வருகின்றன. இவர்களின் செயல்பாடுகளால் இந்தியா மதசார்பற்ற, ஜனநாயக நாடாக நீடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து உள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்திய பொருளாதாரம் நிலைகுலைந்து போயிருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளும் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறோம்.
இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில், மதசார்பற்ற ஜனநாயகவாதியை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில், இந்திய ஜனநாயகத்தை, அரசியலமைப்பை, மதசார்பற்ற தன்மையை கொண்ட வேட்பாளரை முன்நிறுத்த, அனைத்து மதசார்பற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பாஜக தவிர்த்த தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் ஒன்றிணையும் போது, பாஜக ஒன்றும் பெரிய கட்சி அல்ல.
பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற வேண்டும் என்பதற்காக பல்வேறு பிரச்னைகளை கிளப்புகின்றனர். கோயில்கள், ஆதினங்கள் எப்படி இருக்க வேண்டும்? என்று பல நீதிமன்ற தீர்ப்புகள் இருக்கின்றன. ஆதினங்கள் தாமாக முன் வந்து வரவு செலவு கணக்குகளை கொடுக்க வேண்டும். சிதம்பரம் என்றாலும் சரி.. மதுரை என்றாலும் சரி.. அவர்களும் அது பொருந்தும். கோவில்களை கல், மண்ணை சுமந்து கட்டியது சாதாரண எளிய பொதுமக்கள். கோயில்கள் மீதான நம்பிக்கையால் தங்களது ரத்தத்தை சிந்தியவர்கள் அவர்கள் தான். கோயில்கள் மக்களின் சொத்து. உண்டியல்களில் இருப்பது மக்களின் பணம். எனவே பொதுமக்களுக்கு, கோவில்களின் வரவு செலவு கணக்குகளை தெரிந்து கொள்ள எல்லா உரிமையும் உண்டு.
சாதியின் பெயரால் ஒடுக்குமுறை இருக்கக்கூடாது. சமூகநீதி, பொருளாதார நீதி ஆகியவை ஏழை, எளிய மக்களுக்கும், சிறுபான்மையின மக்களுக்கும் தொடர்ந்து கிடைக்க வேண்டும். வாரணாசியில் இன்று என்ன நடக்கிறது? என்பதை பார்க்க முடிகிறது. சாதி மதங்கள் கடந்து புதிய சமுதாயம் அமைய வேண்டும் என்பதற்காக கொள்கை ரீதியாக போராடுவதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய நோக்கமாக இருக்கிறது" என்றார்.
இதையும் படிங்க: TN Weather Update: தமிழ்நாட்டில் நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!