திருப்பூர் மாவட்ட ஆட்சியராக விஜய கார்த்திகேயன் கடந்த செப்டம்பர் மாதம் பொறுப்பேற்றார். இவர் தனது செயல்களால் பொதுமக்களிடம் நன்மதிப்பைப் பெற்றுவருகிறார். இந்நேரத்தில் தெலங்கானா மாநிலத்தில் தப்பிச்செல்ல முயன்ற நான்கு குற்றவாளிகள் காவல் துறையினர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு, சிறப்பான சம்பவம் என்று பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
மேலும், ரஜினி படத்தின் பாடல் வரியான சும்மா கிழி என்ற ஹாஷ்டேக்கயும் பதிவிட்டு தனது கருத்தைப் பகிர்ந்திருந்தார். இந்தப் பதிவிற்கு ஏராளமானோர் கலவையான விமர்சனங்களை எழுப்பியுள்ளனர். 'மாவட்ட ஆட்சியராக இருந்துகொண்டு என்கவுன்டருக்கு ஆதரவாகப் பதிவிட்டுள்ளீர்களே' என ஒருவர் கேட்டதற்கு, அது தனது தனிப்பட்ட கருத்து எனவும், 'என்கவுன்டரை நீங்கள் ஆதரிக்கிறீர்களா' என்ற கேள்விக்கு, தனிப்பட்ட முறையில் இந்த வழக்கிற்கு இது சரியான தண்டனை என்றே சொல்வேன் எனவும் பதில் கூறினார்.
தெலங்கானா என்கவுண்டர்... என்ன நினைக்கிறார்கள் தமிழ் மக்கள்?
குற்றவாளிகள் தப்பிக்கும்போது தான் சுடப்பட்டுள்ளனர் என்றும், அவ்வாறு சுடவில்லையெனில் காவல் துறையினர் சுடப்பட்டிருப்பார்கள், பின்னர் காவலர்களுக்குத் தான் இரங்கல் தெரிவித்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியரின் இந்தப் பதிவிற்குப் பொதுமக்கள் ஆதரவாகவும், எதிராகவும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.