திருப்பூர் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், வளர்ச்சித் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிந்த பணிகளை திறந்து வைத்தல், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (நவம்பர் 6) திருப்பூர் வருகை தந்தார்.
அப்போது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மைதுறை, மகளிர் திட்டம், கூட்டுறவுத்துறை, வருவாய்துறை உள்ளிட்ட 29 துறைகளில் 5592 பயனாளிகளுக்கு 66 கோடியே 72 லட்சத்து 75 ஆயிரத்து 822 ருபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 31 கோடியே 68 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான முடிந்த வளர்ச்சித் திட்டப்பணிகளை திறந்து வைத்தும், 287 கோடியே 38 லட்சத்து 41 ஆயிரம் ருபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வைத்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியதுபோல் மதுக்கடைகள் படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதாகவும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து பேச திமுகவுக்கு உரிமை இல்லை எனவும் கூறினார். அதிமுக ஆட்சியில் பேரறிவாளனுக்கு இரண்டு முறை பரோல் வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், மனிதாபிமான அடிப்படையில் தற்போதும் 7 பேர் விடுதலைக்காக சட்ட மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி இருப்பதாக கூறினார்.
உயர் மின் கோபுர விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு மின்சாரம் வழங்க பிற மாநில விவசாயிகள் உயர் மின் கோபுரங்கள் அமைக்க முன்வந்துள்ள நிலையில், தமது மாநில வளர்ச்சிக்காக இங்குள்ள விவசாயிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், இதைத் தவிர்த்து மாற்று திட்டம் ஏதும் இல்லை எனவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்ட சூழ்நிலையில் தடையை மீறியதால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.