தூத்துக்குடி: சிலுவைப்பட்டி கிராமத்தை சேர்ந்த 57 பேர் கொண்ட குழுவினர் தஞ்சை, பூண்டி மாதா பேராலயத்திற்கு நேற்று முன்தினம் ஒரு பஸ்சில் ஆன்மிக சுற்றுலாவாக சென்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை பூண்டி மாதா பேராலயம் அருகில் உள்ள கொள்ளிடம், செங்கரையூர் பாலம் அருகே பஸ்சை நிறுத்தி விட்டு கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்துள்ளனர். ஆற்றில் நீரோட்டம் அதிகம் இருந்த நிலையில் ஆற்றில் இறங்கி குளித்தவர்கள் அதன் ஆழமான பகுதிக்கு சென்று உள்ளனர்.
அப்போது சார்லஸ், அவருடைய தம்பிகள் பிரதிவ்ராஜ், தாவிதுராஜ் மற்றும் ஹெர்பல், பிரவீன்ராஜ், ஈசாக் ஆகிய ஆறு பேர் ஆற்றில் மூழ்கி பலியானார்கள். இதைத் தொடர்ந்து அவர்களின் உடல் கண்டெடுக்கப்பட்டு திருவையாறு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உள்ள சிலுவைபட்டி கிராமத்திற்கு வருகை தந்த மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆற்றில் மூழ்கி பலியான ஆறு பேரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து நிவாரணமாக தல ஒரு லட்ச ரூபாய் வீதம் 6 பேரின் குடும்பத்திற்கும் 6 லட்ச ரூபாயை திமுக சார்பில் வழங்கினார்.
இதையும் படிங்க: 'மின் இணைப்பை துண்டித்ததாக பொய் கூறிய போர்மேன்':ஒப்பந்த தொழிலாளர் அளித்த மரண வாக்கு மூலம்!