சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், ஃபென்னிக்ஸ் ஆகியோர் நீதிமன்றக் காவலில் இறந்த சம்பவம் தொடர்பாக, மனித உரிமைகள் ஆணையம் தூத்துக்குடியில் விசாரணை நடத்திவருகிறது. வியாபாரிகள் இறந்தது தொடர்பாக, அதில் சம்பந்தப்பட்ட அனைவரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இதில் முக்கிய நபராக கருதப்படுபவர் சாத்தான்குளம் மருத்துவமனை மருத்துவர் வினிலா. ஏனெனில் வியாபாரிகள் ஜெயராஜ், ஃபென்னிக்ஸை சிறையில் அடைப்பதற்கு முழு உடற்தகுதி பரிசோதனை செய்து மருத்துவச் சான்றிதழ் அளித்தது, மருத்துவர் வினிலா தான்.
காவல் துறையினரால் துன்புறுத்தப்பட்ட நிலையில் ஜெயராஜ், ஃபென்னிக்ஸுக்கு முழு உடல் தகுதி சான்றிதழ் வழங்கியது குறித்து, அவரிடம் மனித உரிமைகள் ஆணைய அலுவலர் குமார் விசாரணை நடத்தினார்.
விசாரணைக்காக காலை 10 மணிக்கு ஆஜரான மருத்துவர் வினிலாவிடம் மனித உரிமைகள் ஆணைய அலுவலர் குமார், சுமார் 2.30 மணிநேரம் தொடர்ந்து விசாரணை நடத்தினார்.
சாத்தான்குளம் கொலை வழக்கு: ஐந்து பேரிடம் சிபிஐ விசாரணை
இதையடுத்து மருத்துவர் வினிலா நண்பகல் 12.30 மணி அளவில், விசாரணை அலுவலகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார். மேலும் கோவில்பட்டி சிறைச்சாலையில் ஜெயராஜ், ஃபென்னிக்ஸுக்கு மருத்துவ சிகிச்சை அளித்த மருத்துவர் வெங்கடேஷ், கோவில்பட்டி அரசு மருத்துவர் பாலசுப்பிரமணியன், கிளை சிறைச்சாலை அலுவலர் சங்கர், தனிப்பிரிவு காவலர் சந்தனகுமார் ஆகியோரிடமும் மனித உரிமைகள் ஆணைய அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.