தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வைப்பாறு, கயத்தாறு ஆகிய பகுதிகளில் இடி மின்னல் தாக்கி வைப்பாறு சேர்ந்த கோட்டை பாண்டி, ரமேஷ், கயத்தாறு பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து, முருகராஜ் ஆகியோர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்ச ரூபாய் முதலமைச்சரின் நிவாரண நிதியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி ஆகியோர் இன்று (மே 16) நேரில் சென்று வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ஆகியோர் பேட்டியளித்தனர்.
அப்போது, தமிழ்நாடு முழுவதும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உள்ள நிலையில் ஸ்டெர்லைட்டில் பழுது காரணமாக ஆக்ஸிஜன் உற்பத்தி தடைபட்டுள்ளது. இது எப்போது சரி செய்யப்படும் என்ற கேள்விக்கு கனிமொழி எம்.பி., "ஸ்டெர்லைட் ஆக்ஸிஜன் உற்பத்தியில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டு விட்டது. வரும் புதன்கிழமை (மே 19) முதல் மீண்டும் ஆக்ஸிஜன் உற்பத்தி தொடங்கும் என ஸ்டெர்லைட் தரப்பில் தெரிவித்துள்ளனர்" என்றார்.
ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவது குறித்தும், ரெம்டெசிவிர் மக்களுக்கு எளிதாக கிடைப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு, "உயிர்காக்கும் மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆகவே கள்ளச்சந்தையில் ஆக்ஸிஜன், ஆன்டி-வைரல் மருந்துகள் ஆகியவற்றை பதுக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு மருத்துவமனைகள், கரோனோக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் போன்றவற்றில் உயிர் காக்கும் மருந்துகள் எளிதில் கிடைப்பதற்கு அரசாங்கம் வழிவகை செய்யும். கரோனா தொற்றுநோய் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு எல்லா வழிகளிலும், ஒரு நொடி கூட ஓய்வின்றி தயாராகி செயல்பட்டு வருகிறது" என்றார்.
இதையும் படிங்க: ஊரடங்கு மீறல்: தூத்துக்குடியில் 86 லட்சம் அபராதம் வசூல்!