தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், ஒரு நபர் ஆணையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் 24 ஆவது கட்ட விசாரணை நேற்று தொடங்கி வரும் 22 ஆம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறுகின்றன.
இரண்டாம் நாளான இன்று நடக்கும் விசாரணைக்கு ஆஜராக 56 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக விளக்கமளிக்க நடிகர் ரஜினிகாந்துக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக அவர் தரப்பிலிருந்து அவரது வழக்கறிஞர் இளம்பாரதி, நீதிபதி அருணா ஜெகதீசன் முன்பு இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
விசாரணை முடிந்தபின் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் இளம்பாரதி, “ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு தொடர்பாக நடிகர் ரஜினிகாந்திடம் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் விசாரணை நடத்தக் கோரி மனு தாக்கல் செய்துள்ளோம். ஆனால், தூத்துக்குடியில் அதற்கான வசதிகள் இல்லை எனக் கூறியுள்ளனர். தேவைப்பட்டால் சென்னை முகாம் அலுவலகத்திற்கு நடிகர் ரஜினிகாந்தை அழைத்து விசாரணை மேற்கொள்ளலாம் எனவும் கூறியுள்ளோம். மனுவை பரிசீலிப்பதாக கூறியுள்ளனர்” என்றார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி லட்சக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர். அப்போது பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்துவிட்டு திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கு சமூக விரோதிகள் போராட்டத்தில் ஊடுருவியதே காரணம் என்று பேசியிருந்தார்.
இதையடுத்து இத்துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்க நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அரசு அமைத்தது. நடிகர் நஜினிகாந்தும் இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த நிலையில், அவரையும் நேரில் ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘அப்பாவிற்கு அறுவை சிகிச்சை முடிந்து நலமாக இருக்கிறார்’ -கமல் ஹாசன் மகள்களின் அறிக்கை