தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. கடந்த இருநாட்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகரமே மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சாலைகள் முழுமையாகச் சேதமடைந்துள்ள நிலையில் சாலைப் போக்குவரத்து மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சிக்குட்பட்ட தாழ்வான பகுதிகள், புறநகர்ப் பகுதிகளில் வீடுகள் என மழை வெள்ளதால் சூழப்பட்டுள்ள நிலையில், மழை வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. சத்யா நகர்ப் பகுதியில், கனமழையின் காரணமாக இரண்டு வீடுகள் இடிந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக வீட்டிலிருந்த யாரும், எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினர்.
ஈடிவி பாரத் நிறுவனர் ராமோஜி ராவுக்கு பிரதமர் மோடி புகழாரம்!
இச்சமயத்தில், மழை வெள்ளத்தால் சூழ்ந்துள்ள பகுதிகளைத் தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கீதா ஜீவன், “சத்யா நகர்ப் பகுதிகளில் உள்ள உப்பளத்திலிருந்து வெளியேறும் உபரி நீரானது, வடிகாலில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக அருகிலுள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து நிற்கிறது.
இதனால் வீடுகளில் உள்ளவர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இரண்டு வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. மக்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வசித்து வருகிறார்கள். இன்னும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மழை வெள்ளம் காரணமாக இங்குள்ள மக்கள் வெளியேறி மாற்று இடத்திற்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது” என்று கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சத்யா நகர் மக்கள் கூறுகையில், “இந்தப் பகுதிகளில் மழைநீர் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. 25 ஆண்டு காலமாகவே எங்கள் பகுதி இதே நிலையில் தான் இருந்து வருகிறது. இது குறித்து மாநகராட்சி அலுவலர்களிடம் புகாரளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.