நெல்லை மாவட்டம் ஏர்வாடி அடுத்த சிறுமளஞ்சி அருகே சிங்கநேரி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி கண்ணன்(45). இவரது சகோதரி மகள் காவியா, பெருமளஞ்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இன்று(ஜூன் 8) ஹால் டிக்கெட் வழங்கப்பட்ட சூழலில் அவருக்கு ஹால் டிக்கெட் பெறுவதற்காக ஒரே இருசக்கரவாகனத்தில் கண்ணன், அவரது மகன் சபரீசன், அவரது சகோதரர் மகள் மனிஷா, சகோதரி மகள் காவியா ஆகிய நான்கு பேர் வந்துள்ளனர்.
இந்நிலையில் பெருமளஞ்சியில் உள்ள பள்ளிக்கு வந்து ஹால் டிக்கெட் பெற்றுக்கொண்டு வீட்டுக்கு வரும்போது ஏர்வாடி அருகே நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற போது நாங்குநேரியிலிருந்து வள்ளியூர் நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக கண்ணன் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் அனுப்பி வைத்தனர். இதில் மருத்துவமனை செல்லும் வழியில் கண்ணன், மனிஷா ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனையடுத்து உடற்கூறாய்வுக்காக நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த மற்ற இருவரும் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த விபத்து குறித்து ஏர்வாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டுனர் முத்துக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.