திருநெல்வேலி மாவட்டம் கொக்கிரகுளம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவர் அவரது 15ஆவது வயதில் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடும்போது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். அதில் முதுகில் அடிபட்டு இரண்டு கால்களும் செயல்படாமல் போய்விட்டன. இளம் வயதில் இரண்டு கால்களும் செயல்படாமல் வீல்சேர் மட்டும் தான் வாழ்க்கை என்று இருந்த லட்சுமணன் பின்னர் தன்னம்பிக்கையுடன் வாழத் தொடங்கியுள்ளார்.
இவருடைய தன்னம்பிக்கைக்கு அமர் சேவா சங்கத்தின் தலைவர் ராமகிருஷ்ணன் காரணம் என்றும் தெரிவிக்கிறார். ’ஊனம் தடையல்ல. தான் ஏதாவது சாதிக்க வேண்டும்’ என்று துடித்த லட்சுமணனுக்கு ராமகிருஷ்ணன் வீல்சேர் கூடைப்பந்து விளையாட்டை கற்றுக்கொடுத்துள்ளார்.
பின்னர் மாவட்டம், மாநிலம் என்று இல்லாமல் இந்தியாவிற்காக தாய்லாந்து வரை சென்று வீல்சேர் கூடைப்பந்து போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று, பல்வேறு பதக்கங்களை லட்சுமணன் பெற்றுள்ளார்.
தமிழ்நாடு அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு, அவர் ஏராளமான பதக்கங்களை வாங்கியுள்ளார். இவரது தன்னம்பிக்கையை பார்த்த அமர்சேவா சங்கம் இவருக்கு 'சாதனையாளர் விருது' வழங்கி கவுரவித்துள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தென்காசியில் நடைபெற்ற 'அமர்சேவா சங்கத்தின்' விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ரவி கையால் 'சாதனையாளர் விருதை' லட்சுமணன் பெற்றார்.
இந்நிலையில் இன்று (ஜூன் 22)சொந்த ஊருக்குத் திரும்பிய அவருக்கு ஊர் மக்கள் சார்பில் வாணவேடிக்கை மற்றும் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை லட்சுமணனை வெகுவாகப் பாராட்டினர்.
லட்சுமணன், தான் இப்படி சாதனை செய்வதற்கு அமர்சேவா சங்கத்தின் தலைவர் ராமகிருஷ்ணன் ஒரு காரணம் என்றும் அவரை முன்னுதாரணமாக வைத்து தான் தான் விளையாட்டில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.
பல்வேறு போட்டிகளில் இந்தியா சார்பாகவும், தமிழ்நாடு சார்பாகவும் கலந்து கொண்டு தான் வெற்றி பெற்றதாகவும் தற்பொழுது ஊர் மக்கள் தமக்கு அளித்த வரவேற்பு மிகவும் மகிழ்ச்சி ஏற்படுத்தியதாகவும் லட்சுமணன் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் துணை ஆட்சியர் (பணி நிறைவு) சொக்கலிங்கம் மற்றும் ஊர் மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையும் படிங்க:தென்காசியில் தமிழ்நாடு சதுரங்க கழகத்தின் மாவட்ட அளவிலான போட்டிகள் தொடக்கம்!