நெல்லை: நெல்லை மாவட்டம், வீரவநல்லூரைச் சேர்ந்த மைதீன் பிச்சை(55) என்பவர், வீரவநல்லூர் மெயின் பஜாரில் நகை கடை நடத்தி வருகிறார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு, மைதீன் பிச்சை வழக்கம்போல் இரவு கடையை அடைத்துவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச்சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை வழி மறித்த அடையாளம் தெரியாதநபர்கள், அரிவாளால் வெட்டிவிட்டு, அவர் வைத்திருந்த 5 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச்சென்றனர். இந்தச்சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உடனடியாக விசாரணையில் இறங்கினார். மேலும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மாரி ராஜன், துணை காவல் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில், 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி வந்தனர். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில், இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக, சுதாகர், மருதுபாண்டி, ஐயப்பன் மற்றும் 2 சிறுவர்கள் என 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 3 கிலோ நகைகளையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் இருவர் தலைமறைவாக இருப்பதாகவும், மீதமுள்ள நகைகளை அவர்கள் வைத்திருக்கலாம் என்றும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருவதாகத் தெரிவித்தார். மேலும் இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்த, தனிப்படை போலீசாரை காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.
இதையும் படிங்க: மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய இளைஞருக்கு தர்மஅடி