திருநெல்வேலி : நாம் தமிழர் கட்சியின் தென்மண்டல நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், நெல்லை மாவட்டம் கேடிசி நகர் பகுதியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு, தென்மண்டலத்துக்கு உள்பட்ட 21 சட்டப்பேரவை, கன்னியாகுமரி மக்களவைத் தேர்தல்களுக்கான வேட்பாளரை அறிமுகப்படுத்தி பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நாங்கள் முன்பே தேர்தலுக்கு தயாராகி விட்டோம். தரமான கல்வி, தடையில்லா மின்சாரம் வழங்குவது எங்கள் நோக்கம் என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “கச்சத்தீவு பிரச்னை குறித்து கேள்வி எழுப்பிய போது, கச்சத்தீவை ஏன் கொடுத்தார்கள்? உண்மையிலேயே கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமில்லை எனது சேதுபதி மன்னின் சொத்து அது. மன்னர் முறை ஒழிப்பின் போது இந்தியா கச்சத்தீவை எடுத்துக்கொண்டது. அதன் பிறகு இந்திராகாந்தி தனது சுய விருப்பத்துக்காக கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தார்.
கச்சத்தீவை மீட்கும் பேச்சுக்கே இடமில்லை. இலங்கைக்கு கொடுத்தது கொடுத்தது தான் என்று காங்கிரஸ் அரசு கூறியது அதையே தான் தற்போது பாஜக அரசும் நீதிமன்றத்தில் சொல்கிறது. கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு இவர்கள் 2 பேரும் காரணம். இதுவரை 845 தமிழ்நாட்டு மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
தற்போது பாஜக அரசு தீர்மானம் நிறைவேற்றி கச்சத்தீவை மீட்க வேண்டியது தானே? சர்வதேச நீதிமன்றம் சென்றாலும் அவர்கள் மத்திய அரசு சொல்வது தான் கேட்பார்கள் எங்களிடம் கச்சத்தீவை மீட்கும் வழிமுறைகள் உள்ளது. அதை தற்போது சொல்ல மாட்டோம் என்றார்.
உங்கள் தலைமையில் மூன்றாவது அணி அமையும் எனக் கேட்டதற்கு, ஒரே அணிதான் நாங்கள் தனித்து போட்டியிடுவோம். சசிகலா வருகைக்கு பின்னர் தமிழ்நாட்டு அரசியலில் மாற்றம் இருக்கிறதா என ஒரு ஜோசியர் போல் நான் எதையும் கூற முடியாது. அவர் உடல் நலம் பெற்று நல்ல முறையில் திரும்ப வரவேண்டும். திடீரென அவர் உடல்நிலை எப்படி மோசமானது என்று தெரியவில்லை. தனியறையில் இருந்த அவருக்கு எப்படி கரோனோ ஏற்பட்டது. இதில் ஏதோ சதி திட்டம் இருப்பதாக சந்தேகம் எழுகிறது என்றார்.
தொடர்ந்து, 1.1 விழுக்காடாக இருந்த எங்களது வாக்கு வங்கி, கடந்த உள்ளாட்சித் தேர்தலில் 12 விழுக்காடாக அதிகரித்துள்ளது. தற்போது கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் இருக்கிறேன். காலம் இருக்கிறது. எனவே மாற்றம் வரலாம். என்னைப் பொருத்தவரை காட்டுப்பள்ளியில் 6,000 ஏக்கரில் அதானி துறைமுகம் அமைப்பதை எதிர்ப்பதுதான் எனது நோக்கம். ஒருவேளை அவர்கள் துறைமுகம் அமைந்தால் டெல்லி விவசாயிகள் போன்று போராட்டம் நடத்துவேன் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சசிகலா உறவினர் இளவரசிக்கும் கரோனா தொற்று!