திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மாவட்ட கரோனா தடுப்பு பணி சிறப்பு அலுவலர் அபூர்வா, தென் மண்டல காவல்துறை ஐஜி முருகன், மாநகர காவல் ஆணையர் அன்பு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின்போது காணொலி காட்சி மூலமாக நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் நோயாளிகளிடம் அமைச்சர்கள் நலம் விசாரித்தனர். அப்போது சிகிச்சை முறையாக மேற்கொள்ளப்படுகிறதா, ஏதேனும் குறைகள் இருக்கிறதா என்று அமைச்சர்கள் கேட்டறிந்தனர்.
அதைத் தொடர்ந்து மாவட்டத்தில் நிலவி வரும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு குறித்தும், சிகிச்சை முறைகள் குறித்தும் அமைச்சர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு விளக்கமாக எடுத்துரைத்தார். கேரள மாநிலத்தில் இருந்து பெறப்பட்டு வந்த 40 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தடைபட்டதால் தான் நெல்லையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவுவதாகத் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கேரளாவில் இருந்து கிடைத்து வந்த 40 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் தான் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக இரண்டு மாநில அரசுகளும் பேசிமுடிவு செய்யப்படும். தொழிற்சாலைகளில் தயாரிக்கும் ஆக்ஸிஜனை வேறு பயன்பாட்டுக்குப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 8,000 கிலோ லிட்டர் திரவ ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. கேரளாவில் இருந்து கிடைத்த ஆக்ஸிஜன் வரத்து நிறுத்தப்பட்ட நிலையில், அதன் தேவையை மாற்று வழியில் பூர்த்தி செய்யப்படும். ஜெ.எஸ்.டபிள்யூ மற்றும் டி.என்.பி.எல் ஆலைகளில் இருந்தும் ஆக்ஸிஜன் பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன" என்றார்.