திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள ராஜலிங்கபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான முத்துக்குமார்.(53), தனது மகள் பாப்பா(18) பன்னிரண்டாம் வகுப்பு முடித்த நிலையில், அவரை தனியார் கல்லூரியில் பி.எஸ்சி பட்டப்படிப்பில் சேர்த்துள்ளார். இதற்காக 12 ஆயிரம் ரூபாய் கல்லூரி கட்டணத்தை இரண்டு தவணைகளாக முத்துக்குமார் செலுத்தியுள்ளார்.
கூலித் தொழிலாளி என்பதால் கையில் இருந்த பணம் முழுவதும் மகளின் படிப்புக்காக செலவழித்துவிட்டு, குடும்ப செலவுக்கு போதிய பணம் இன்றி தவித்து வந்துள்ளார். தன்னை படிக்க வைப்பதற்காக பெற்றோர்கள் சிரமப்படுவதை பார்த்து மாணவி பாப்பா மன வேதனை அடைந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று(ஜூலை 26) மாலை பெற்றோர் இருவரும் வெளியே சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த மாணவி பாப்பா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீடு திரும்பிய பெற்றோர் மாணவி தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற களக்காடு போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவியின் கைப்பையை சோதனையிட்டபோது அவர் எழுதிய தற்கொலை கடிதம் கிடைத்தது. அதில், தனது படிப்பு செலவுக்காக பெற்றோர்களை சிரமப்படுத்தியதால் தற்கொலை செய்ய முடிவு எடுத்ததாக மாணவி குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:சிவகாசி இளைஞர் படுகொலை சம்பவத்தில் 5 பேர் கைது!