திருநெல்வேலி: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளை முன்னிட்டு, இந்து மக்கள் கட்சி சார்பில் நெல்லையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அரசு நேதாஜியின் சுதந்திரப் போராட்ட வரலாற்றையும் மறைத்து வந்தது. தற்போது பாடத்திட்டத்தில் நேதாஜியின் வரலாறுகளை சேர்க்க வேண்டும்.
அதே போல் அவரது உருவம் பொறித்த ரூபாய் நாணயங்களை வெளியிட வேண்டும். தற்போது எங்குப் பார்த்தாலும் காந்தியின் உருவப்படம் பொறித்த நாணயங்கள் தான் வெளிவருகின்றன. இந்திய சுதந்திர போராட்டத்தின் தந்தை நேதாஜி தான். ராகுல் காந்தி ஜல்லிக்கட்டு போட்டியில் ஒரு கட்சியின் தலைவராக கலந்து கொண்டதை வரவேற்கிறோம்.
ராகுல்காந்தி விவகாரம்
ஆனால் அவர் வெளிநாட்டில் இருந்து வந்தவுடன் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல், விமான நிலையத்தில் இருந்து நேரடியாக ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ள வந்துள்ளார். உலகம் முழுவதும் தற்போது இரண்டாம் கட்ட கரோனோ அபாய அலை வீசி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் ராகுல்காந்தி ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டதை கடுமையாக கண்டிக்கிறோம்.
எனவே கரோனோ விதிமுறைகளை காரணம் காட்டி ராகுல்காந்தியின் தமிழ்நாடு சுற்றுப்பயணத்ததை அரசு தடை செய்ய வேண்டும். நடிகர் ரஜினி தனது உடல்நிலை கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று கூறியுள்ளார். ஆனால் ஆன்மிக அரசியல் கொள்கையிலிருந்து விலகுவதாக அவர் அறிவிக்கவில்லை.
திமுக சதி
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 4 பேர் திமுகவில் இணைந்துள்ளனர். திட்டமிட்டே திமுக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை அழைத்து ஏதோ ரஜினி ரசிகர்கள் அனைவரும் திமுக பக்கம் இருப்பதாக காட்டிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். திமுக என்றாலே ஆன்மிக அரசியல் கொள்கைக்கு விரோதமானது. எனவே இந்தச் சதித் திட்டத்தை அறிந்து ரஜினி ரசிகர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
இந்து மக்கள் கட்சி 234 சட்டமன்ற தொகுதியிலும் ஆன்மிக அரசியல் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்கிறது. அப்படியிருக்க வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு திமுக சதித்திட்டம் தீட்டி ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளை விலைக்கு வாங்க நினைக்கின்றனர். எனவே திமுகவின் சதியை ரசிகர்கள் முறியடிக்க வேண்டும்.
தமிழீழ தனிநாடு
முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். சமீபத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் இலங்கை படையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கச்சத்தீவை மீட்கும் பேச்சுவார்த்தையில் மத்திய அரசு தற்போது ஈடுபட்டு வருகிறது. அதைச் சீர்குலைக்கும் முயற்சியில் தான் சிங்கள பௌத்த பேரினவாதிகள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
எப்படி வங்காளதேசத்தில் இஸ்லாமியர்களுக்கு தனி நாடு இந்திராகாந்தி உருவாக்கிக் கொடுத்தாரோ போன்று இலங்கையில் இந்து தமிழீழ தனி நாட்டை மத்திய அரசு உருவாக்கித் தர வேண்டும். ஆகவே வருகிற குடியரசு தினத்தில் கச்சத்தீவில் இந்திய அரசு தேசியக்கொடியை ஏற்ற வேண்டும். சசிகலா சிறையில் இருந்து வரவேண்டும் என்றுதான் நாங்கள் பிரார்த்திக்கிறோம். இந்துக்களுக்கு ஆதரவாக பேசி வரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி க்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இந்துக்கள் திருடர்கள் என்று கருணாநிதி கூறினார். அதற்கு ஸ்டாலின் தற்போது மன்னிப்பு கேட்பாரா?” என்றார்.
இதையும் படிங்க: ரஜினிக்குதான் ஆதரவு, பாஜகவுக்கு இல்லை -அர்ஜுன் சம்பத்