சேலம்: தாரமங்கலம் அடுத்த நங்கவள்ளியில் உள்ள ஆதிதிராவிடர் காலனியில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வசித்துவருகின்றனர். இந்தக் காலனியிலிருந்து மேட்டூர் பிரதான சாலைக்குச் செல்ல 52 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் தர்மலிங்கசெட்டியார் என்பவர் தானமாகக் கொடுத்த 38 அடி அகலத்தில் 740 அடி நீளம் கொண்ட இடத்தைப் பயன்படுத்திவந்துள்ளனர்.
இந்நிலையில், தனியார் கல்லூரி நிறுவனம் ஒன்று அப்பகுதி மக்கள் சாலையைப் பயன்படுத்த முடியாதவாறு தடுப்புச் சுவரைக் கட்டியுள்ளது. இதனையடுத்து ஆதிதிராவிடர் காலனி மக்கள் இரவோடு இரவாகத் தடுப்புச் சுவரை இடித்து அகற்றினர்.
இதனால் மற்றொரு தரப்பினர் நேற்று காலை ஆதிதிராவிடர் காலனிக்குள் புகுந்து அப்பகுதி மக்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகிவருகிறது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தடுப்புச் சுவரைக் கட்ட ஆதரவாகச் செயல்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் ஜீவானந்தம் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மனு வழங்கினர்.
இதையும் படிங்க: அரசு ஆதிதிராவிடர் விடுதி மாணவர்கள் அமைச்சரிடம் புகார்!