சேலம் உருக்காலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன்கூடிய 500 படுக்கை கொண்ட சிறப்பு கரோனா சிகிச்சை மையம் செயல்பட்டுவருகிறது. அதே வளாகத்தில் மேலும் 500 படுக்கைகளை ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள இரண்டாவது கரோனா சிகிச்சை மையத்தினை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று (ஜூன் 10) தொடங்கிவைத்தார்.
12,658 படுக்கை வசதிகள்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் செய்து முடிக்கப்பட்டுள்ளன.
உருக்காலை வளாகத்தில் நேற்று (ஜூன் 10) திறக்கப்பட்டுள்ள சிகிச்சை மையத்தினையும் சேர்த்து மாவட்டத்தில் 12 ஆயிரத்து 658 படுக்கை வசதிகள் கரோனா சிகிச்சைக்காக தயார் நிலையில் இருக்கின்றன.
ஆர்டிபிசிஆர் பரிசோதனை
குறிப்பாக 7,065 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை நாள் ஒன்றுக்கு ஐந்தாயிரம் செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் (ஜூன் 9) ஒரேநாளில் 9,404 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
முதலமைச்சர் சேலம் வருகை
இன்றஉ (ஜூன் 11) மாலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சேலம் வருகைதருகிறார். நாளை (ஜூன் 12) காலை 10.30 மணிக்கு மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்துவைக்கிறார்.
ஜூன் 14 வரை ஊரடங்கு
தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரை ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரு மாதத்தில் இரண்டாவது அலையை எதிர்கொள்கிற அளவிற்கு மருத்துவ கட்டமைப்பை முதலமைச்சர் ஸ்டாலின் உருவாக்கியுள்ளார். மூன்றாவது அலை வந்தாலும் அதை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது.
தமிழ்நாட்டில் 100 விழுக்காடு அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதே அரசின் இலக்கு. அதற்குண்டான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு ஜூன் 14ஆம் தேதிவரை உள்ளது.