சேலம்: மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு ' நீட்' இன்று முழுவதும் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி நாகரசம்பட்டி பகுதியைச் சேர்ந்த காசி விஸ்வநாதன் என்பவரின் மகன் கணேஷ், நீட் தேர்வு எழுதுவதற்காகச் சேலம் உடையாப்பட்டி பகுதியிலுள்ள தனியார்ப் பள்ளிக்கு வந்தார்.
சாலையைக் கடந்து தேர்வு மையத்திற்குச் செல்ல இருவரும் ஓரமாக நின்று கொண்டிருந்தனர். அப்போது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்திற்குட்பட்ட அரசு பேருந்து, சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது.
உடையாப்பட்டி பகுதியிலுள்ள வேகத்தடையில் அந்த அரசு பேருந்து ஏறி இறங்கியபோது, பேருந்திலிருந்து டயர் கழன்று, தேர்வு மையத்திற்குச் செல்வதற்காக சாலையைக் கடக்கக் காத்திருந்த கணேஷ், அவரது தந்தை காசி விஸ்வநாதன் மீது வேகமாக மோதி விழுந்தது.
![neet student father met with an accident](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-slm-01-neet-accident-vis-pic-script-tn10057_12092021121616_1209f_1631429176_913.jpg)
டயர் மோதிய வேகத்தில் இருவரும் அடிபட்டு சாலையில் கீழே சாய்ந்தனர். இதில் மாணவன் கணேஷ் லேசான காயத்துடன் தப்பினார். ஆனால் மாணவனின் தந்தைக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, அவரின் இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது.
அப்போது அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த அம்மாபேட்டை காவல் துறையினர் அவரை மீட்டு அவசர ஊர்தி மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மாணவனின் தந்தை, மாணவனைப் பார்த்து "நன்றாகத் தேர்வு எழுது, எனக்கு ஒன்றும் இல்லை" எனக் கண்ணீருடன் கூறியதைக் கேட்டு மாணவன் அழுது கொண்டே தேர்வு எழுதச் சென்ற சம்பவம் அப்பகுதியிலிருந்தவர்களை கண்கலங்கச் செய்தது.