சேலத்தில் தற்பொழுது மாம்பழ சீசன் களைகட்டியுள்ளது. இந்நிலையில், வியாபாரிகள் சிலர் ரசாயன மருந்துகளை பயன்படுத்தி மாம்பழங்களை பழுக்க வைத்து குடோன்கள், கடைகள் மூலம் விற்பனை செய்துவருகின்றனர் என்று சேலம் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலருக்கு புகார்கள் வந்தன.
இதனையடுத்து உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் கதிரவன் உத்தரவின் பேரில், சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அடுத்த மேட்டுப்பட்டி தாதனூர் பகுதியில், அலுவலர்கள் சோதனைசெய்தனர்.
அங்கு வெங்கடேஷ் என்பவருக்குச் சொந்தமான மாம்பழ மண்டியில் ரசாயன வேதிப்பொருள் மூலம் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டு, பேக்கிங் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், சுமார் 2 டன் அளவிலான ரசாயனம் தெளிக்கப்பட்ட மாம்பழங்கள் பேக்கிங் செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து மாம்பழங்களை பறிமுதல்செய்து உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது.