சேலம்: தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடை தயாரிக்கும் பணியில் சேலம் மாவட்டத்தில் உள்ள இரண்டு தையல் மகளிர் கூட்டுறவு தொழிலாளிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளி சீருடை தைக்கும் கூட்டுறவு உறுப்பினர்களுக்கு 2015 முதல் வருடம் தோறும் , உயர்த்தி வழங்க வேண்டிய 5 விழுக்காடு கூலியை உயர்த்தி வழங்காமல், அரசு காலம் தாழ்த்தி வருவதாகவும், இது தொடர்பாக பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனையடுத்து, சேலம் மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திடம் கூட்டுறவு லாப அடிப்படையில் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தையல் தொழிலாளர்கள் , "சேலம் மாவட்டத்தில் இலவச சீருடை தைக்கும் பணியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றோம். கடந்த 15 ஆண்டுகளாக இந்த பணியில் மிகவும் குறைந்த கூலி அடிப்படையில் பணி செய்து வருகிறோம். எனவே அரசு உடனடியாக 2015 முதல் வழங்க வேண்டிய 5 விழுக்காடு கூலி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும்" என கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க:ஐபிஎஸ் அலுவலர்கள் 5 பேர் டிஜிபி ஆக பதவி உயர்வு