சேலம் மாவட்டம், ஓமலூர் தின்னப்பட்டி அருகே உள்ள பூசாரிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவர் முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் உதவியாளராக கடந்த 10 ஆண்டு காலமாக இருந்து வருகிறார்.
எடப்பாடி பழனிசாமிக்கு உதவியாளராக இருந்தபோது ஓமலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல நபர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி இவர் பணம் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம், நெய்வேலி பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவருக்கு அரசு போக்குவரத்துக் கழகத்தின் உதவி பொறியாளராக வேலை வாங்கித் தருவதாகக் கூறி 17 லட்ச ரூபாயை, தமிழ்ச்செல்வனின் நண்பர் செல்வகுமார் மூலமாக பெற்றுக் கொண்டு மணி ஏமாற்றியுள்ளார்.
இது தொடர்பாக தமிழ்ச்செல்வன் சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் விசாரணை செய்து வந்தார்.
அவ்விசாரணையில், வங்கிக் கணக்கில் 17 லட்ச ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணி மீது இரண்டு பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் மணி தலைமறைவாக இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி இளமுருகன் தலைமையில் காவல் துறையினர் அவரைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பல லட்சம் ரூபாய் மோசடி: எடப்பாடி பழனிசாமி உதவியாளர் மீது புகார்