மதுரை மாவட்டம் திருமங்கலம் காட்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த லட்சுமணன் (18), அவரது நண்பர் பழனிவேல்ராஜனுடன் (20) நேற்று அதிகாலை திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் சரவண பொய்கை குளத்தில் குளிக்கச் சென்றுள்ளனர்.
அங்கு லட்சுமணன் குளத்தில் இறங்கி குளிக்கச் சென்றுள்ளார். நண்பர் பழனிவேல்ராஜனுக்கு நீச்சல் தெரியாததால் குளத்தில் இறங்காமல் படிக்கட்டில் அமர்ந்திருந்தார். அப்போது லட்சுமணன் ஆழமான பகுதிக்குள் சென்றதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு தண்ணீருக்குள் மூழ்கியதாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்ட பழனிவேல்ராஜன் அதிர்ச்சியடைந்து அருகில் இருப்பவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். மேலும் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கவே தொடர்ந்து தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
தீயணைப்புத் துறையினர், அரைமணிநேர தேடுதலுக்குப் பின் உடலை மீட்டு காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர். உடலைப் பெற்றுக்கொண்ட திருப்பரங்குன்றம் காவல் துறையினர், உடற்கூராய்வு செய்ய அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: மதுரையில் மின்னணு கடைகளில் பயங்கர தீ விபத்து!