மதுரையைச் சேர்ந்த மோகன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், 'கடந்த 2011ஆம் ஆண்டு எல்லை தாண்டும் மீனவர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக அதிநவீன வசதி கொண்ட வாக்கி-டாக்கி மீனவர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டு ரூ. 57 கோடி முதல் கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன்படி 3 டவர்கள் அமைக்கப்பட்டு 3,100 வாக்கி டாக்கி அமைக்கத் திட்டம் வடிவமைக்கப்பட்டது. இதே திட்டம் 2008ஆம் ஆண்டு ரூபாய் 7 கோடி செலவில் அமைக்கப்பட திட்டமிடப்பட்டிருந்தது. அதன்பின்பு அமைந்த புதிய அரசு இத்திட்டத்திற்காக 57 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது.
ஆனால், 2011ஆம் ஆண்டு மீனவர்களுக்கு வழங்கிய வாக்கிடாக்கி திட்டத்தில் 37 கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது. ஆனால், இந்த விசாரணை முறையாக நடைபெறவில்லை. தற்போது வரை இந்த ஊழல் குறித்து முழுமையான விசாரணை நடைபெற்று முடிக்கப்படவில்லை.
இதுகுறித்து ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் விசாரணை செய்ய மனு அளிக்கப்பட்டது. எனவே, மீனவர்களுக்கு வழங்கிய வாக்கி டாக்கியில் நடைபெற்ற ஊழலை உடனடியாக விசாரணை செய்து முடிக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. லஞ்சம் மற்றும் ஊழல் துறை அலுவலர்கள் தரப்பில், இதே போல் பல்வேறு புகார்கள் பெறப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து நீதிபதி, இதே புகார் உடன் எத்தனை மனுக்கள் பெறப்பட்டுள்ளன? அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: ஜூலை 11 வரை அதிருப்தி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கூடாது - உச்ச நீதிமன்றம் உத்தரவு