மதுரை: பள்ளி, கல்லூரி மாணவிகளை குறிவைத்து உலா வரும் நபர்கள் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
மதுரை செல்லூர் நரிமேட்டில் அமைந்துள்ளது மத்திய அரசுக்கு சொந்தமான ஒரு பள்ளியும், அதனை ஒட்டிய ஒரு தனியார் கல்லூரியும். இங்கு பயிலும் மாணவியரை குறிவைத்து, 15 ஆண்டுகளாக ஒரு கும்பல் பாலியல் தொழில் செய்து வருவதாகவும், தாங்கள் நடத்தி வரும் உணவகம், கைப்பேசி விற்பனைக் கடைகள் மூலம் மாணவிகளுக்கு வலைவிரிப்பதாகவும், அவ்வாறு சிக்குகின்ற மாணவியரை ஆபாச படங்கள் எடுத்து தங்களின் பாலியல் தொழிலுக்கு மிரட்டி உடன்பட செய்வதாகவும் ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதனையடுத்து மதுரை தல்லாகுளம் காவல் துறையினர் இந்த தகவலை அடிப்படையாக கொண்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வந்தது. மேலும், மே 12ஆம் தேதி மதுரை மாநகர காவல்துறை அலுவலகத்தில் இருந்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய அல்லது பாதிக்கப்பட்ட மாணவிகள் எங்களுக்கு தகவல் தரலாம் என்றும், புகார் தெரிவிப்பவர் குறித்த ரகசியம் காக்கப்படும் எனவும் ஒரு எண் பத்திரிகைகளுக்கு செய்திக் குறிப்பாக வழங்கப்பட்டது.
உண்மையில் மதுரை மற்றுமொரு பொள்ளாச்சியா..? தங்களின் பாலியல் வேட்கைக்கு கல்லூரி மாணவிகள் பலி ஆக்கப்படுகிறார்களா? இதுபோன்று மாணவிகள் மிரட்டப்பட்டு இத்தொழிலுக்கு தள்ளப்படுவது குறித்து காவல்துறை செய்ய வேண்டியது என்ன என்பது குறித்தும் சமூக ஆர்வலர்கள் என்ன கூறுகிறார்கள்..? பார்ப்போம்.
சட்ட உரிமைக் கழக நிறுவனர் உபன்யாஸ் சரவணக்குமார் கூறுகையில், பெரும்பாலான பாலியல் தொடர்பான குற்றச் சாட்டுகளில் பெண்களுக்கு போதுமான விழிப்புணர்வு இருந்தும் அதை முறையாக எங்கு புகார் அளிப்பது என்பதில் தான் அவர்களுக்கு குழப்பம் இருக்கிறது. அண்மையில் கொண்டுவரப்பட்ட போக்சோ சட்டத்தின்படி இதுபோன்ற குற்றத்தில் ஈடுபடும் ஆண்கள், ஒருபோதும் தப்பிக்க இயலாது பெண்களுக்கு நல்ல பாதுகாப்பு தரக் கூடிய சட்டமாகும் என்று கூறுகிறார்.
சமூக செயற்பாட்டாளர் ஜோதி கூறுகையில், பள்ளி கல்லூரி மாணவியரின் வீட்டுச் சூழல் சமூகச் சூழலை கணக்கில்கொண்டு இது மாதிரியான பாலியல் வக்கிரம் கொண்ட கும்பல் களத்தில் இறங்குகின்றது அது போன்ற சூழல்கள் என்னென்ன என்பதை உணர்ந்து நாம் அதை சரி செய்ய வேண்டிய கடமை நமக்கு உண்டு பெற்றோர் ஆசிரியர் சமூகம் என ஒருங்கிணைந்த செயல்பாடு இதுபோன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிறார்
இப்படிப்பட்ட சமூக விரோத கும்பல்களின் செயல்பாடுகளால் பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளின் கல்விக் கனவை முடக்கி விடுகின்ற சூழலும் உருவாகலாம் பாலியல் கொடுமைகளை தடுக்கும் பொறுப்பு காவல்துறைக்கு மட்டுமே உரித்தானது அன்று. சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் அக்கறை வேண்டும் குறிப்பாக தமிழக அரசு இந்த சிக்கல்களுக்கு விரைந்து முடிவு கட்ட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.