மதுரை: முனிச்சாலை ஜெயா ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோசப் ஜெயசீலன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கல்வி நிறுவனங்களில் தொடர்ச்சியாக பாலியல் குற்றச்சாட்டுகள் எழுவது குறித்து மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, " அரசு தரப்பில் மனுதாரர் தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவு செய்வதாக ஆசிரியர்கள் புகார் அளித்ததாகவும், அதன் அடிப்படையிலேயே அவர்களை வேறு பள்ளிக்கு மாற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆசிரியர்கள் தரப்பிலும் அது தொடர்பாக தனியே மனுக்கள் தாக்கல் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மனுதாரர் இரண்டு ஆசிரியர்களை பணியமர்த்துமாறு கோராமல், பணி மாறுதல் செய்யப்பட்ட இரண்டு ஆசிரியர்களின் பணி மாறுதல் உத்தரவை ரத்து செய்யுமாறு கோரியுள்ளார்.
நீதியை நிலைநாட்ட...
நீதிமன்றம் இதுபோன்ற செயல்பாடுகளை பொறுத்துக் கொள்ளாது. கல்வி நிறுவனங்களில் இதுபோல பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக எழுவதைக் கண்டு நீதிமன்றம் அதிர்ச்சி அடைகிறது. உரிய நடவடிக்கை எடுக்காததால், இதுபோன்ற நபர்கள் நீதியின் பார்வையிலிருந்து தப்பிக்க முயல்கின்றனர்.
ஆனால், நீதியை நிலைநாட்ட நீதிமன்றம் எந்த எல்லைக்கும் செல்லும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். ஆகவே, இரண்டு பெண் ஆசிரியர்களும் அனுப்பிய புகார் அடிப்படையில், கீரைத்துறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை உடனடியாக தொடங்கப்பட வேண்டும்.
அவர்களது பணி பதிவேடுகளை மாவட்ட கல்வி அலுவலர் வழக்கு முடியும்வரை தனது பொறுப்பில் வைத்திருக்க வேண்டும். கீரைத்துறை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் வழக்கின் ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை மார்ச் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: 'மீனவர்கள் எல்லை தாண்ட எந்த உரிமையும் இல்லை: சென்னை உயர் நீதிமன்றம்'