மதுரை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்கிஸ் இருவரும், கடந்த ஜூன் 19 ஆம் தேதி காவல்துறையின் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு, காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இக்குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ் உள்ளிட்ட 10 பேர் சிபிசிஐடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் பால்துரை என்பவர் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் மீதியுள்ள 9 பேரும் சிறையில் உள்ளனர். இது குறித்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு, அவர்கள் விசாரணை நடத்திய நிலையில், 2027 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன் நகல் 9 பேரிடமும் வழங்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையானது மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றம் பொறுப்பு நீதிபதி வடிவேலு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 9 பேரும் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டனர்.
இதையடுத்து குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் தரப்பு வழக்கறிஞர், குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களை சிறையில் சந்திக்க அனுமதி அளிக்கவில்லை எனவும், அதனால் வாதம் நடத்த போதிய கால அவகாசம் தேவை எனவும் வாதிட்டார்.
அப்போது இடைமறித்த நீதிபதி, "குற்றஞ்சாட்டப்பட்ட தரப்பிற்கு போதிய கால அவகாசம் கொடுக்கப்பட்டுவிட்டது. வழக்கு விசாரணையை எந்த நீதிமன்றம் நடத்த வேண்டும், எந்த நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடரும் என்ற உத்தரவை பிறப்பிக்க இருக்கிறோம்" என்றார்.
இதையடுத்து நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தபட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், தனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், சிறையில் சிறப்பு வகுப்பு அளிக்க வேண்டும். சிறைக்கு வெளியே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அப்போதும் இடைமறித்த நீதிபதிகள், "ஒரு மாத காலமாக உங்களுடைய வழக்கறிஞர் என்ன செய்தார். இங்கு நீதிமன்றத்தில் இதுபற்றி முறையிட்டு இருக்கலாமே? இது பற்றி பரிசீலிப்போம்" என்றார்.
இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கை டிசம்பர் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உடல் நிலை சரியில்லாததால் சிறையில் தனக்கு சிறப்பு வகுப்பு மற்றும் சிறைக்கு வெளியே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க கோரி மனு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'தேசிய நெடுஞ்சாலைகளில் பேரிகார்டு அமைப்பதில் தனியார் விளம்பரங்களை அனுமதிப்பது ஏன்?'