மதுரை: மக்களவையில் மகாத்மா காந்தி வேலை உறுதிச் சட்டம் குறித்து உறுப்பினர் சு. வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு, கிராமப் புற மேம்பாட்டு அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அளித்துள்ள பதிலில் இத்திட்டத்தின் கீழ் தகுதி வேலை நாட்களை அதிகரிக்கிற எண்ணம் அரசுக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் அளித்துள்ள பதிலில், நாடு முழுவதும் சராசரி வேலை நாட்கள் ஏப்ரலில் 12, மே 17, ஜூன் 6, ஜூலை 14, ஆகஸ்ட் 12 என்ற அளவில் இருந்துள்ளன என்று பதில் அளித்துள்ள அமைச்சர் தோமர், இந்த சராசரி வீதம் தமிழ்நாட்டில் ஏப்ரல் 4, மே 7, ஜூன் 9, ஜூலை 10, ஆகஸ்ட் 8 என்ற அளவில் இருந்துள்ளன என்று தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டத்தில் தகுதி வேலை நாட்களை 100 நாட்களிலிருந்து மேலும் அதிகரிப்பதற்கான முன்மொழிவு ஏதும் அரசின் தரப்பில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், நாடு முழுவதும் வேலையிழப்புகள் கோடிக் கணக்கில் ஏற்பட்டுள்ள நிலையிலும், புலம் பெயர் தொழிலாளர் பலர் சொந்த கிராமங்களில் தஞ்சம் புகுந்துள்ள நிலையிலும் ஊரக வேலைத் திட்ட நாட்களை அதிகரிக்கிற எண்ணம் இல்லை என்ற மத்திய அரசின் பதில் அதிர்ச்சியளிக்கிறது.
மேலும், தகுதி வேலை நாட்களை 200ஆக உயர்த்த வேண்டுமென்று விவசாய அமைப்புகளும், இடதுசாரி கட்சிகளும் எழுப்பி வருகிற கோரிக்கையை அரசு பரிசீலிக்க மறுப்பது கிராமப் புற மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும். தமிழ்நாட்டின் சராசரி அளவு, தேசிய சராசரியை அளவை விடக் குறைவாக, ஐந்து மாதங்களில் இருந்திருக்கிறது என்பது அமைச்சர் பதிலில் வெளிப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு இது குறித்து உடனடியாக எதிர்வினையாற்ற வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.