மதுரை: சாத்தூர் அதிமுகவினர் இடையே கடந்த 24ஆம் தேதி ஏற்பட்ட மோதலில், அதிமுக மாவட்டச் செயளாலரை தாக்கியதாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று (அக்.06) நீதிபதி புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் தரப்பில் ஆஜராகிய மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான், 'ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் மீது பொய்யாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறோம். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும்' என முறையிட்டார்.
முன்ஜாமீன் கோரிய மனு
இதனைக் கேட்ட நீதிபதி, 'இது குறித்து அரசியல்வாதிகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திலோ, தலைமை நீதிபதியிடமோ முறையிடலாம்' எனத் தெரிவித்தார்.
அதற்கு மனுதாரர் தரப்பில், இன்று தலைமை நீதிபதி அமர்வு விடுமுறை என்பதால், மதுரைக்கிளையில் முறையிடுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, முன்ஜாமீன் கோரிய மனுவின் விவரங்களைப் பார்த்தபின்பு, வழக்கை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என நீதிபதி குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: பாலியல் சித்ரவதை வழக்கு விசாரணை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு