தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்த வேண்டும் என வலியுறுத்தி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசன் மனு ஒன்றை இன்று தாக்கல் செய்தார்.
அதன் பின்னர் ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், 'தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறவுள்ள குடமுழுக்கு தமிழில்தான் நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சமஸ்கிருதத்தின் ஊடுருவல்
தொல்காப்பியர் காலத்திலிருந்து அர்ச்சனை என்பது தமிழ் மொழியில்தான் நடைபெற்றுள்ளது. தேவாரம் திருவாசகம் ஆகியவை தமிழில் அர்ச்சனை நடைபெற்றதை உறுதி செய்கின்றன. சுந்தரமூர்த்தி நாயனார் அர்ச்சனை பாட்டு தமிழே ஆகும் என்று தேவாரத்தில் பாடியிருக்கிறார்.
வடக்கிலிருந்து வந்த ஆரியர்கள்தான் தமிழை நீக்கிவிட்டு, அவர்கள் கொண்டுவந்த சமஸ்கிருத மொழியை இங்கே திணித்தார்கள். சமஸ்கிருத மொழி யாருக்கும் தாய்மொழி இல்லை. அதற்கு ஒரு தாயகமும் கிடையாது. அதற்கு ஒரு சொந்த இனமும் கிடையாது. ஆனால், எல்லா இடத்திலும் பரவி ஆக்கிரமித்து ஆக்டோபஸ் போல ஆதிக்க மொழியாக திகழ்கிறது.
இது கோயில்களுக்குள் மட்டுமே நடக்கின்ற ஒரு காரியமல்ல. சமூகத்திலும் ஊடுருவி வர்ணாசிரம அடிப்படையை உருவாக்கி, இங்குள்ள தமிழ் சாதியினரை தீண்டத்தகாதவர்களாக மாற்றியவர்கள் ஆரியர்கள்.
தீண்டாமை எனும் நோய்
மனிதர்களிடத்தில் இவர்கள் புகுத்திய தீண்டாமையை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால் கோயில்களில் தமிழ் இன்னும் தீண்டப்படாத மொழியாகவே இருக்கிறது. அதனை நீக்க வேண்டும், தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு தமிழில் மட்டும்தான் நடத்த வேண்டும். சமஸ்கிருதம் துளி கூட அங்கு இடம்பெறக் கூடாது என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. இதனையே உயர் நீதிமன்றத்தில் மனுவாக நாங்கள் அளித்துள்ளோம்.
ஆட்சியாளர்களின் நிலைப்பாடு
தமிழ்நாடு ஆட்சியாளர்கள் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் நடத்துவோம் என்று சமாளிக்கிறார்கள். ஆனால் ஒரு வாரமாகவே தஞ்சை பெருவுடையார் கோயிலில் சமஸ்கிருதம் மூலமாகவே வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. அதற்கு அஞ்சி சங்கர மடத்திலிருந்து பிராமணர்களை அழைத்து வந்து இந்த சடங்குகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் மொழியை இனத்தை இழிவுபடுத்திக் கொண்டிருக்கின்ற அயல் மொழிக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை? எங்களது போராட்டத்தை மீறி சமஸ்கிருதத்தில் வழிபாட்டைச் செய்தால் தீண்டாமை வழக்கில் பதிவுசெய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்பதுதான், தஞ்சை பெரியகோவில் உரிமை மீட்புக் குழுவின் வேண்டுகோள்.
தமிழின் மரபு
இன்று தொடுக்கப்பட்டுள்ள வழக்கை பொறுத்தவரை மரபு மற்றும் சட்டம் என்ற அடிப்படையில் பார்த்தால் இரண்டுமே தமிழ் மொழிக்குதான் பொருந்துகிறது. மரபு என்று பார்த்தால் தொல்காப்பிய காலத்திலிருந்தே இங்கு வழிபாட்டு மரபுகள் அனைத்தும் தமிழில்தான் இருந்துள்ளன. சட்டம் என்று பார்த்தால் 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நடைபெற்ற வழக்கில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது தீர்ப்பாக வழங்கப்பட்டது.
அந்த வழக்கில் எதிர்தரப்பினர் ஆகம விதிகள் என்று கூறியபோது, நீதிபதி ஆகமங்கள் எதிலும் இந்த சாதியினர்தான் அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த மொழியில்தான் வழிபாடு நடத்த வேண்டும் என்றெல்லாம் குறிப்பிடப்படவில்லை என்று மிகத் தெளிவாக அந்தத் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
இந்தத் தீர்ப்புக்கு மேல் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு என்ன வேண்டும்? தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்தலாம் என்று ஆணை இருக்கிறது. மேலும் பூஜை செய்வதற்கு தமிழர்களுக்கு சைவ வைணவ முறைப்படி பயிற்சி அளிக்கப்பட்டு டிப்ளமோ சான்றிதழ்களும் வழங்கப்பட்டு உள்ளது.
வழிபாட்டிற்குரிய போற்றி மந்திரங்கள் புத்தகங்களாகவும் சைவ வைணவ முறைப்படி வழங்கப்பட்டுள்ளன. எவ்வித சட்ட தடையும் இல்லாத போது ஒரு சாரார் சொல்வதைக் கேட்டு தமிழக முதல்வர் ஏன் செயல்பட வேண்டும்?
கல்வெட்டில் பதிந்துள்ள உண்மைகள்
ராஜராஜேச்சரம் என்ற பெயரில் தொல்லியல் அறிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியம் எழுதியுள்ள நூலில் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் உள்ள அனைத்து கல்வெட்டு செய்திகளும் அதில் இடம் பெற்றுள்ளன. மன்னன் ராஜராஜசோழன் 48 ஓதுவார்களை நியமித்ததும் அவர்களுக்கு சம்பளம் வழங்கியதும் அக்கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளன.
அதுமட்டுமன்றி தஞ்சை பெரியகோயிலுக்கு அர்ச்சகர் குழு ஒன்றை உருவாக்கி அக்குழுவின் தலைவராக பவண பிடாரன் என்ற தமிழரை தலைவராக்கி செய்தியும் அக்கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன. சமஸ்கிருதத்தில் தான் ராஜராஜசோழன் வழிபாடு நடத்தினார் என்று தமிழ் குடமுழுக்கு முறைக்கு எதிரானவர்கள் சான்று காட்ட முடியுமா? தமிழுக்கு என்று சான்றே இல்லாவிட்டாலும்கூட இது எங்கள் மண் எங்கள் மொழி. ஆகையால் தமிழில்தான் நடத்தப்பட வேண்டும்.
நீதிபதி ரஞ்சன் கோகோய் வழங்கிய தீர்ப்பில் கூட ஒருவேளை தமிழ் முறை வழிபாட்டிற்கு தடை இருப்பதாக கருதினால் அது இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்துகிற சமத்துவத்திற்கு எதிரானதாக இருந்தால் அந்த தடை நீக்கப்படும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார். இதற்குமேல் தமிழக ஆட்சியாளர்களுக்கு என்ன வேண்டும்?
தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் நடைபெறுகின்ற வழிபாட்டிற்கும் அந்த கோவிலை பராமரிக்கின்ற மத்திய தொல்லியல் துறைக்கும் எந்த தொடர்பும் கிடையாது. வழிபாட்டு முறையில் தொல்லியல் துறை தலையிடுவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. இதுகுறித்து தொல்லியல்துறையிடமிருந்து எனக்கு அளிக்கப்பட்ட கடிதமே சான்று.
எப்படியும் தமிழ் வெல்லும்
தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் தமிழில்தான் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பிப்ரவரி ஒன்றாம் தேதி பெருந்திரள் போராட்டமொன்றை தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் தஞ்சையில் ஏற்பாடு செய்துள்ளோம். இது தமிழர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக விடுக்கின்றோம்' என்றார்