மதுரை: கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இச்சூழலில், வரும் கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன், நேற்று(ஜுன் 7) முதல் தனியார் பள்ளி மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகள் தொடங்கின.
இணையவழி மூலம் நடைபெறும் வகுப்புகளில் பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. அதனைப் பின்பற்றி நேற்று(ஜுன் 7) இணையவழி மூலம் வகுப்பு நடைபெற்றது.
அதன்படி இணையவழி வகுப்புகளில் பங்குபெறும் மாணவ, மாணவியர் சீருடை அணிந்தபடி பங்கேற்கவும், வகுப்புகளை நடத்தகூடிய ஆசிரியர்கள் வகுப்பறைகளில் இருப்பது போன்றே உடைகள் அணிந்தும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இந்த வகுப்புகளின்போது வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களின் பின்னணியில் தேவையற்ற நடமாட்டமோ, குரல்களோ இடம்பெறக் கூடாது. இதுபோன்று மாணவர்கள் தங்களது சொந்தப் பெயரிலேயே வகுப்பு முடியும் வரை பங்கேற்க வேண்டும். இடைவிடாத முழுநேர பங்கேற்பை உறுதி செய்தல் அவசியம்.
ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு பாடவேளையும் 30 முதல் 45 நிமிடங்கள் மட்டுமே இருக்க வேண்டும் எனவும், நாளொன்றுக்கு ஒரு ஆசிரியர் ஆறு வகுப்புகளும், வாரத்திற்கு 28 இணைய வழி வகுப்புகளும் எடுக்க வேண்டும் எனவும், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இணைய வழி வகுப்புகள் நடத்த வேண்டும் எனவும் கட்டுபாடுகள் உள்ளன.
மொத்தம், 30 முதல் 45 நிமிடங்கள் என 2 பாடவேளைகள் மட்டுமே நடத்தப்படுவதோடு, இவ்வகுப்புகளில் பங்கேற்க குழந்தைகளைக் கட்டாயப்படுத்த கூடாது என வழிகாட்டு நெறிமுறைகளுடன் வகுப்புகள் நடத்தப்பட்டன.