நெல்லை மாவட்டம் தென்காசியில் கேபிள் டி.வி. ஆபரேட்டர் சங்கத் தலைவராக இருந்த முகமது மைதீன் என்பவரை கடந்த 2009ஆம் ஆண்டு மூன்று பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து தென்காசி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை தென்காசி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
பின்னர் மதுரையில் உள்ள வகுப்புவாத மோதல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. அங்கு விசாரணை முடிந்த பின், இந்தக் கொலை வழக்கில் கைதான முருகன், தம்புரான் என்ற கிருஷ்ணன், பொன்னையா ஆகிய மூன்று பேருக்கும் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.
தற்போது, ஆயுள்தண்டனையை எதிர்த்து அவர்கள் மூன்று பேரும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்திருந்தனர்.
இந்த வழக்கை நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அமர்வு விசாரித்தனர். முடிவில் மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் நிரூபிக்கப்படவில்லை. எனவே அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படியுங்க: 'லயோலா கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் மீதான பாலியல் வழக்கு' - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு