நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு எழுத்தாளர் சு.வெங்கடேசன் போட்டியிட இருக்கிறார்.
இதற்கிடையே, மு.க.ஸ்டாலினுக்கு எதிராக முஷ்டி முறுக்கியிருக்கும் அழகிரியின் செயல்பாடு இந்த தேர்தலில் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடமும் எழுந்துள்ளது. மேலும், அழகிரியை சந்தித்து ஆதரவு கேட்பேன் என சு.வெங்கடேசன் கூறியிருப்பதால் அழகிரி திமுக கூட்டணிக்கு சாதகமாக வேலை செய்வாரா? இல்லையா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி, “நாடாளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்து ஒரு வாரத்தில் அறிவிப்பேன். மதுரை மார்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளர் என்னை சந்தித்து பேசியதும் ஆதரவு அளிப்பது குறித்து முடிவெடுப்பேன். கடந்தத் தேர்தலில் இருந்த திமுகவின் வெற்றி நிலைமைதான் இந்த தேர்தலிலும் இருக்கும்” என்றார்.