மதுரை செல்லூர் பகுதியில் முதலமைச்சரின் சிறப்புக் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை ஆட்சியர் வினாய், வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் பங்கேற்றனர். இந்த சிறப்பு குறைதீர் முகாமில் பங்கேற்ற சுமார் 124 பேருக்கு 16 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மேலும், பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களுடைய பகுதியில் உள்ள பிரச்னைகள் தொடர்பான மனுக்களைக் கொடுத்துச் சென்றனர். இதைத்தொடர்ந்து மேடையில் பேசிய வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா, ‘ஏழை மக்களுக்கு ஆயிரம் ரூபாய், 20 கிலோ அரிசியைக் கொடுக்க வேண்டாம் எனக் கூறுகிறார் கமல்ஹாசன். அவரின் உறவினர்கள் எவ்வளவு செல்வாக்குடன் உயர்ந்து உள்ளார்களோ, அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் உயரட்டும்; இலவசத்தை நாங்கள் நிறுத்துகிறோம்’ என்று கூறினார்.
தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, பாவமா பஞ்சப் பரட்டையாகத் தலைக்கு எண்ணெய் கூட தேய்க்காமல் மனு கொடுக்க வந்துள்ளார்கள், உங்களைப் பார்க்கும்போது எனக்கே பாவமாக இருக்கிறது என்று சர்ச்சையைக் கிளப்பும் வகையில் பேசியுள்ளார்.