இது தொடர்பாக மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கடைகாரர்கள் சங்கம் சார்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில், "மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் 22 கடைகளில் பூ விற்பனையும், மற்ற கடைகளில் மஞ்சள், குங்குமம், பூஜை சாமான்கள், புத்தகங்கள் மற்றும் நகைகள் ஆகியவையும் விற்பனை செய்யப்படுகின்றன. கரோனா பொதுமுடக்கத்தின் போது அடைக்கப்பட்ட கடைகளை மீண்டும் திறக்க தமிழக அரசு தளர்வு அளித்தும், கோவில் நிர்வாகம் கடைகளை திறக்க அனுமதிக்கவில்லை. தமிழகத்தில் உள்ள பிற கோவில்களின் உள்ளே செயல்படும் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், மீனாட்சி அம்மன் கோயில் கடைகள் மட்டும் திறக்கப்படாமல் உள்ளது. எனவே கோவில் நிர்வாகம் சார்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி பார்த்திபன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, கோயில் நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கடைகளை ஆய்வு செய்த பின் திறப்பதற்கான அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர்கள் தரப்பில், கடை உரிமையாளர்கள் மற்றும் வேலை பார்ப்பவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால், கடைகளை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ஒரு வாரத்திற்குள் ஆய்வு செய்து கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: வேலூரில் 18 வயது சிறுவன் மீது பாய்ந்த போக்சோ!