மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”21 நாள்கள் தனித்திருப்பது பெரியவர்களாகிய நமக்கே பெரிய சவாலாக இருக்கும்போது நம் குழந்தைகள் எப்படித்தான் இந்த நாள்களைக் கடந்து வருவார்கள்? தெருவையும் மைதானத்தையும் நண்பர்களையும் பிரிந்து வாடிக்கொண்டிருக்கும் அவர்களின் சோகம் மிகப்பெரியது.
ஒவ்வொரு வீட்டிலும் நாள் முழுக்கக் குழந்தைகளைச் சோர்வடைந்துவிடாமல் உற்சாகமாக வைத்திருக்கப் பெற்றோர்கள் படும்பாடு, அதனால் அவர்கள் அடையும் மனஉளைச்சல் இன்று முக்கிய பிரச்னைகளில் ஒன்றாக முன்னுக்கு வந்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் இதற்குச் சிறு அளவிலேனும் நம்மால் ஏதேனும் உதவ முடியுமா எனக் கடந்த சில நாள்களாக ஆலோசித்ததன் விளைவாக குழந்தைகளுக்கான கீழ்க்கண்ட கலை இலக்கியப் போட்டிகளை அறிவிக்கிறோம். வீட்டிலிருந்தபடியே குழந்தைகள் இப்போட்டிகளில் பங்கேற்கலாம்.
இப்போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் ஓய்வுநேரத்தைக் குழந்தைகள் தங்களது படைப்பாற்றலை வளர்க்கப் பயன்படுத்திக்கொள்வார்கள். படைப்பாற்றலைச் சிறப்பாக வெளிப்படுத்தும் குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.
போட்டிகள்:
1.நாள்தோறும் ஒரு கதை;
நாள்தோறும் ஒரு கதையை தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மொழியில் எழுத வேண்டும் (ஒவ்வொரு மொழிப்படைப்புக்கும் தனித்தனியே பரிசுகள் உண்டு).ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் எழுதும் கதை 100 வார்த்தைகளுக்குக் குறையாமல் இருக்க வேண்டும். ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் எழுதும் கதை 100 வார்த்தைகளுக்குக் குறையாமலும், 300 வார்த்தைகளுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 10,11,12 ஆம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள் எழுதும் கதை 500 வார்த்தைகளுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.
2. நாள்தோறும் ஒரு கவிதை
நாள்தோறும் ஒரு கவிதையை மரபுக்கவிதை, புதுக்கவிதை, இசைப்பாடல் என எந்த வடிவத்திலும் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மொழியில் எழுத வேண்டும். கவிதை ஒரு பக்கத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இப்போட்டியில் 6ஆம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் பங்கேற்கலாம்.
3. நாள்தோறும் ஓர் ஓவியம்
பென்சில், பேனா, க்ரெயான், வாட்டர் கலர், பெயின்ட் ஆகிய எந்த வரைபொருளைக் கொண்டும் தாளில் கோட்டோவியம், வண்ண ஓவியம், தத்ரூப ஓவியம், கார்ட்டூன் ஆகிய எந்த வடிவத்திலும் படம் வரைந்து, அதனைப் படமெடுத்து அனுப்பலாம். கணினி, செல்போன் மூலம் வரையப்படும் ஓவியங்களையும் அனுப்பலாம். ஒன்றாம் வகுப்பு முதல் 6ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு ஒரு பிரிவாகவும் 7ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் சிறுவர்களுக்கு ஒரு பிரிவாகவும் பரிசுகள் வழங்கப்படும்.
4. நாள்தோறும் ஒரு குறும்படம்
ஒரு நிமிடம் ஓடக்கூடிய குறும்படத்தை செல்போன் உதவியுடன் எடுத்து, கீழே தரப்பட்டுள்ள வாட்ஸ்அப் எண்ணுக்கு உங்களது வீட்டின் முழு முகவரியுடன் அனுப்ப வேண்டும். ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை படிக்கும் அனைவரும் இதில் பங்கேற்கலாம்.
5. நாள்தோறும் ஒரு நகைச்சுவை
ஒரு நிமிடம் ஓடக்கூடிய Standup comedyயை செல்போனில் படமெடுத்து கீழே தரப்பட்டுள்ள வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்ப வேண்டும். ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை படிக்கும் அனைவரும் இதில் பங்கேற்கலாம்.
விதிகள்:
1. மேற்குறிப்பிட்ட போட்டிகளில் பெற்றோர்கள் தாங்கள் படைப்பினை உருவாக்கி குழந்தைகள் பெயரில் அனுப்ப வேண்டாம். குழந்தைகளின் படைப்புத்திறன் வளர்ச்சிக்கு அது உதவாது. குழந்தைகளும் உங்களிடமிருந்து தவறான முன்னுதாரணத்தையே கற்றுக்கொள்வார்கள். இப்போட்டிகளில் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் பங்கேற்க வேண்டும்.
2. படைப்புகள் எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம்.
3. ஒருவரே எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.
4. ஒருவரே எல்லாப் போட்டிகளிலும் பங்கேற்கலாம்.
5. ஏப்ரல் 2ஆம் நாள் முதல் ஏப்ரல் 11ஆம் நாள் வரை 10 நாள்களுக்குத் நாள்தோறும் குழந்தைகள் தங்கள் படைப்புகளை அனுப்பலாம். கட்டாயமாக நாள்தோறும் அனுப்ப வேண்டும் என்ற கட்டாயம் இல்லை; நாள்தோறும் அனுப்பினால் மகிழ்வோம்.
6. படைப்புகளை கீழே தரப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கோ வாட்ஸப் எண்ணுக்கோ அனுப்ப வேண்டும். செல்போனில் தெளிவாகப் படம் எடுத்து அனுப்பலாம். மின்னஞ்சல் என்றால் டைப் செய்தும் புகைப்படம் எடுத்தும் அனுப்பலாம். ஒவ்வொரு நாளும் உங்களது வீட்டின் முழுமுகவரி (செல்பேசி எண்ணுடன்), பள்ளியின் பெயர், அரசுப்பள்ளியா? தனியார் பள்ளியா? ஊர் - ஆகியவற்றை தாளின் மேல்பகுதியில் எழுதியிருக்க வேண்டும். அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளி மாணவர்களும் தனியார்பள்ளி மாணவர்களும் சமான எண்ணிக்கையில் பரிசுக்கு தேர்வு செய்யப்படுவர்.
பரிசுகள்:
ஒவ்வொரு வகைமையிலும் நாள்தோறும் 10 பேர் பரிசுக்குரியவர்களாக தேர்வு செய்யப்படுவர். அதாவது 12 வகைமையில் நாளொன்றுக்கு 120 பேர் தேர்வு செய்யப்படுவர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் ஒவ்வொருவரும் தலா 250 ரூபாயைப் பரிசாய் பெறுவர்.
மூன்று நாள் இடைவெளியில் பரிசு அறிவிக்கப்பட்டு, அவர்களின் வங்கிக் கணக்கிற்குப் பரிசுத்தொகை அனுப்பிவைக்கப்படும். ஒட்டுமொத்தமாக 10 நாள்களிலும் ஒவ்வொரு வகைமையிலும் சிறந்த படைப்பைக் கொடுத்த தலா ஒருவர் வீதம் 12 பேர் தேர்வு செய்யப்படுவர். இவர்களுக்கு தலா 10,000 ரூபாய் பரிசு வழங்கப்படும்.
பெற்றோர்களின் கவனத்திற்கு:
இந்தப் பத்து நாள்களிலும் உங்கள் வீட்டுச்சிறார்கள் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனுபவத்தை எழுதி அனுப்ப வேண்டும். ஏப்ரல் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அதில் சிறந்ததாகக் கருதப்படுகிற 12 படைப்புகள் தேர்வு செய்யப்படும். அந்த 12 பேருக்கும் தலா ரூ 5000 பரிசுத்தொகையாக வழங்கப்படும். மாணவர்களும் பெற்றோர்களும் பங்கேற்கும் இப்போட்டிகளுக்குத் தேவையான சுமார் ஐந்து லட்சம்கொண்ட பரிசுத்தொகையை அபராஜிதா நிறுவனம் வழங்குகிறது. போட்டி மனோநிலையோ, பரிசுத்தொகையோ முக்கியமல்ல. இன்றைய சூழலில் குழந்தைகளும் சிறுவர்களும் வீட்டுக்குள் கட்டுண்டிருக்க வேண்டிய நிலையில் அதனை ஆக்கப்பூர்வமானதாக ஆக்குவதற்கான முயற்சியே இது.
மதுரை மாவட்டத்தின் அனைத்து சிறுவர்களையும் இதில் பங்கெடுக்கவைப்போம். மின்னஞ்சல் அனுப்பும் வாய்ப்போ, பழக்கமோ இல்லாதவர்களுக்கு மற்றவர்கள் உதவி செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரிகள்:
1. கதைகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி mpmaduraistory@gmail.com
2. கவிதைகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி mpmaduraipoem@gmail.com
3. ஓவியங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி mpmaduraiart@gmail.com
வாட்ஸ்அப் எண் 91 8838904390
4. குறும்படங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி mpmaduraishortfilm@gmail.com வாட்ஸப் எண் 91 9442111729
5. Standup comedy அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி mpmaduraistandup@gmail.com வாட்ஸ்அப் எண்91 9488056502
6. பெற்றோர்கள் தங்களின் படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி mpmaduraiparents@gmail.com
இருவருக்கும் மதுரை மக்களின் சார்பில் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.