மதுரை எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகம். இங்கு மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமன்றி, அண்டை மாவட்டங்களான திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரத்திலிருந்தும் மலர்கள் விற்பனைக்குக் கொண்டுவரப்படுகின்றன.
பொதுவாக, மதுரை மல்லிகை இங்கிருந்து வெளி மாவட்டங்கள் மட்டுமன்றி, பல்வேறு மாநிலங்களுக்கும், சிங்கப்பூர் உள்ளிட்ட கிழக்காசிய நாடுகள் சிலவற்றிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மதுரையில் கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக மலர் விற்பனையில் மந்தநிலை ஏற்பட்டது.
இதன் காரணமாகச் செவ்வந்தி உள்ளிட்ட பூக்கள் விற்பனையாகாமல் மலர்ச்சந்தை வளாகத்திலேயே குப்பைகளில் கொட்டுகின்ற நிலை இருந்தது. தற்போது மழை குறையத் தொடங்கியிருப்பதால், மலர்கள் வரத்தும், விற்பனையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று (நவ. 13) மதுரை மல்லிகை ரூ.1,300, பிச்சிப்பூ ரூ.500, முல்லை ரூ.700, பட்டன் ரோஸ் ரூ.120, பட்ரோஸ் ரூ.100, அரளி ரூ.200, செவ்வந்தி ரூ.100, செண்டு மல்லி ரூ.80, சம்பங்கி ரூ.150 என விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இனி அடுத்து வருகின்ற நாள்களில் மதுரை மலர்ச்சந்தையில் பூக்களின் விற்பனை கணிசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தாது மணல் கொள்ளை குறித்து திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்