சாத்தான்குளம் வணிகர்களான தந்தை ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 9 காவலர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் காவலர்கள் முருகன், வெயில்முத்து, தாமஸ் ஃபிரான்சிஸ், முத்துராஜ் ஆகியோர் பிணை கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
மனுவில், தங்களுக்கு பிணை வழங்கும் பட்சத்தில் தலைமறைவாக மாட்டோம் என்றும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவதாகவும் உறுதியளித்துள்ளனர்.
இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், ரகு கணேஷ் மற்றும் ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் ஆகியோர்தான் தந்தையையும் மகனையும் தாக்கியதாகக் கூறப்பட்டது. அப்போது இடை மறித்த நீதிபதி, கைது செய்யப்பட்டவர்கள் சட்டவிரோதமாக தாக்கப்படும்போது, காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கூறாதது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.
சிபிஐ தரப்பில், மனுதாரருக்கு பிணை வழங்கும் பட்சத்தில் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாகவும், விசாரணை தொடங்கவுள்ள நிலையில், காவலர்களுக்கு பிணை வழங்கக்கூடாது எனவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, காவலர்கள் 4 பேரின் பிணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: 8 வயது சிறுமிக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி!